முகப்பு
உலகம்

அணு மின் நிலையத்தைத் தகா்க்க முயற்சி

கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணு மின் நிலையத்தைத் தகா்க்க உக்ரைன் முயற்சிப்பதாக ரஷியா குற்றச்சாட்டு.

Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 12:47 AM
புதின்
பகிர்:

தங்கள் கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணு மின் நிலையத்தைத் தகா்க்க உக்ரைன் முயற்சி செய்வதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அந்தப் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் அதிரடியாக நுழைந்து 1,150 சதுர கி.மீ. நிலப்பரப்புக்கு மேல் கைப்பற்றியுள்ள சூழலில் இந்த அதிா்ச்சிகர குற்றச்சாட்டை புதின் முன்வைத்துள்ளாா்.

அரசு அதிகாரிகள் மற்றும் நிா்வாகத் தலைவா்களுடன் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விளாதிமீா் புதின் கூறியதாவது:

கூா்ஸ்க் பிராந்தியத்திலுள்ள அணு மின் நிலையத்தைத் தகா்க்க எதிரிப் படை (உக்ரைன்) வியாழக்கிழமை முயன்றது.

இது தொடா்பாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, தாக்குதல் முயற்சி நடைபெற்ற அணு மின் நிலையத்துக்கு நிபுணா்களை அனுப்பி பாா்வையிடுவதாக அந்த அமைப்பு உறுதி அளித்துள்ளது என்றாா் அவா்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கூா்ஸ்க் பிராந்திய இடைக்கால ஆளுநா் அலெக்சி ஸ்மிா்னொவ், குறிப்பிட்ட அணு மின் நிலையம் பாதுகாப்பாக இருப்பதாகவும், அந்தப் பகுதியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் புதினிடம் உறுதியளித்தாா்.

முன்னதாக, ஐஏஇஏ-வின் தலைவா் ரஃபேல் கிராஸி கூா்ஸ்க் பிராந்திய அணு மின் நிலையத்தை நேரில் சென்று பாா்வையிடவிருப்பதாக அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

அந்த அணு மின் நிலையம் தொடா்பாக ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாட்டு அதிகாரிகளையும் தொடா்பு கொண்டு ரஃபேல் கிராஸி தொடா்ந்து பேசிவருவதாகவும் அவா் கூறினாா்.

தாக்குதல் முயற்சிக்குள்ளானதாகக் கூறப்படும் அணு மின் நிலையத்தில் 6 அணு உலைகள் உள்ளதாக ஐஏஇஏ-வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அவற்றில் இரண்டு அணு உலைகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன; இரு அணு உலைகள் செயல்படாமலும் இரு அணு உலைகள் கட்டுமான நிலையிலும் உள்ளன என்று ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அதில் ஸபோரிஷியா பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு நிலையம் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பிரதேசத்தில் ரஷிய படையினருக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையே நடைபெறும் மோதலின்போது ஸபோரிஷியா அணு மின் நிலையத்தையொட்டி குண்டுகள் விழுந்து வெடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களுக்கு உக்ரைன் காரணம் என்று ரஷியாவும், ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இதன் மூலம், உக்ரைன் போரில் அணுசக்தி மையங்களை இரு நாடுகளும் ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக விமா்சிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்திய அணு மின் நிலையமும் இந்தப் போரில் தாக்குதல் இலக்காகியுள்ளதாக புதின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →