SWAMINATHAN
SWAMINATHAN
உலகம்

'நவால்னி படுகொலை செய்யப்பட்டார்': செய்தித் தொடர்பாளர் கீர் யார்மிஷ்

DIN

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்த அலெக்ஸி நவால்னியின் (47) மரணம் ஒரு படுகொலை என்று அவரது செய்தித் தொடர்பாளர் கீர் யார்மிஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து "எக்ஸ்' ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அலெக்ஸி நவால்னி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணம் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (பிப். 16) 2.17 மணிக்கு நேரிட்டுள்ளதாக அலெக்ஸியின் தாயாரிடம் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சலேக்கார்ட் பகுதியில் இருப்பதாக சிறை பணியாளர் ஒருவர் கூறுகிறார்.

ரஷிய புலனாய்வு அதிகாரிகள் நவால்னியின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். உண்மை நிலவரம் தெரிந்துகொள்ள அவரது உடல் உடனடியாக நவால்னியின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் வழக்குரைஞரான அலெக்ஸி நவால்னி, அதிபர் விளாதிமீர் புதினை எதிர்த்துப் போராடியவர்களில் மிக முக்கியமானவராக அறியப்படுகிறார்.

ஏற்கெனவே சட்டரீதியிலும், உடல்ரீதியிலும் பாதிக்கப்பட்டிருந்த அவர், சைபீரிய பகுதியைச் சேர்ந்த டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் சென்று கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அதையடுத்து அவருக்கு ஜெர்மனியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மீது "நோவிசோக்' என்ற நச்சுப் பொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு ரஷிய அரசு உத்தரவிட்டதாகவும் ஜெர்மனி குற்றம் சாட்டியது. இதனை ரஷியா மறுத்தது.

கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நவால்னி, கடும் போராட்டத்துக்குப் பிறகு உயிர்பிழைத்தார்.

2021 ஜனவரி மாதம் ரஷியா திரும்பிய நவால்னியை ஜாமீன் நிபந்தனை மீறல் வழக்கில் அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவால்னி, திடீர் உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இறந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

இது, உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் (விடியோ)

ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

இந்தோனேசியாவில் தோண்டத் தோண்ட கிடைக்கும் உடல்கள்..!

கருடன் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT