முகப்பு
உலகம்

100-வது நாளில் இஸ்ரேல்- ஹமாஸ் போர்: பெற்ற படிப்பினைகள் என்ன?

இஸ்ரேல்- ஹமாஸ் போர் ஞாயிற்றுக்கிழமை 100-வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:20 PM
இலவச உணவுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனர்கள் | AP
பகிர்:

இஸ்ரேலில் நடந்த அக்.7 ஹமாஸின் அத்துமீறலைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை 100-வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.

இஸ்ரேல் என்கிற நாடு உருவாகிய 1948 முதல் இத்தனை நாள்கள் நீடித்த போர் இதுதான்.

ஹமாஸை அடியோடு அழிப்பதும் இன்னும் பிணையில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவிப்பதும் இஸ்ரேலின் இலக்கு என்கிற நிலையில் அதனை நிறைவேற்றும் வரை இஸ்ரேல் போரைத் தொடரவுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் | AP

இஸ்ரேலின் நிலை:

நாள்தோறும் இஸ்ரேலிய செய்தி நிறுவனங்களில் போர்க் காட்சிகளும் இஸ்ரேலின் வெற்றிகளும் வீரர்களின் அஞ்சலிகளும் ஒளிபரப்பாகி வருவதாக அசோசியேடட் பிரஸ் தெரிவித்துள்ளது.

அக்.7 நடந்த தாக்குதலில் இழந்த தங்கள் உறவினர்களை எண்ணி இஸ்ரேலியர்கள் வருந்தும் அதே வேளையில் ஹமாஸின் பிடியில் உள்ள மற்றவர்களை மீட்க அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்.

காஸாவின் பலி எண்ணிக்கையும் அங்கு மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்களும் சிறியளவில் இஸ்ரேலில் விவாதத்தை ஏற்படுத்தினாலும் இதனைப் பழிவாங்கும் போராகத் தான் இஸ்ரேல் கருதுகிறது.

போருக்குப் பிறகான காஸாவில் இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்து அதிகம் பேசப்படுவதில்லை.

அக்.7 கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு மரியாதை செலுத்த அவர்களின் புகைப்படங்கள் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள காட்சி | AP

காஸாவின் நிலை:

காஸாவில் பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மக்கள்தொகையில் 85 சதவிகிதம் பேர் தங்கள் வீடுகளைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தெற்கு காஸாவில் மிகக் குறுகிய பரப்பில் பாலஸ்தீனர்கள் தங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் காணாமல் போய் உள்ளனர். கட்டட இடிபாடுகள் மத்தியில் அடிபட்டு உயிரிழந்த மீட்கப்படாதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கில் ஒரு பகுதியினர் பசியில் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. காஸா, வாழத் தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார், ஐநாவின் மனிதநேய பிரிவின் தலைவர் மார்டின் கிரிப்திஸ்.

கட்டட இடிபாடுகளிடையே உடலை மீட்கும் பாலஸ்தீனர்கள் | AP

விரிவடையும் போர்:

மத்திய கிழக்கு நாடுகளில் போர் விரிவடைகிறது. ஈரானிய ஆதரவு பயங்கரவாதக் குழுக்கள், அமெரிக்கா, பிரிட்டன் படைகள் எனப் போர் எல்லை தாண்டிய விவகாரமாக வளர்ந்து வருகிறது.

அக்.7 ஹமாஸ் தாக்குதல் தொடங்கியது முதலே ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலோடு சண்டையிட்டு வருகிறது.

பெய்ரூட்டில் ஹமாஸின் தலைவர்களில் ஒருவரை இஸ்ரேல் கொன்றதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்காவின் நிலைகள் மீது ஈரானிய ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

செங்கடலில் பன்னாட்டு கப்பல்கள் மீது ஹெளதி அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் யேமன் தலைநகரில் இரண்டு நாள்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஐ.நா நீதிமன்ற வழக்கு:

ஐநாவின் நீதிமன்றத்தில் இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்து வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இனப்படுகொலை என்பதை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த வழக்கு நிறைவடைய சில ஆண்டுகள் எடுக்கும் எனத் தெரிகிறது. தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையான காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கான இடைக்காலத் தடை என்பது ஹமாஸுக்கு ஆதரவாக மாறக் கூடும் என இஸ்ரேல் வாதிட்டுள்ளது.

திரைமறைவில் நடந்து வந்த பாலஸ்தீனம்- இஸ்ரேல் விவகாரம் உலகின் மையமாக தற்போது மாறியுள்ளது. போருக்குப் பிந்தைய காஸாவின் ஆளுகை விஷயத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே முரண் நிலவி வருகிறது.

போர் நிறைவடைவதற்கான எந்த அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →