நேபாள பிரதமருக்கு ஆதரவை திரும்பப் பெற்றது சிபிஎன்-யுஎம்எல்: உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்
பிரசண்டா பதவியில் இருந்து விலக வேண்டும்: நேபாளி காங்கிரஸ் தலைவர் தேவுபா வலியுறுத்தல்
நேபாளத்தில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் புதன்கிழமை திரும்பப் பெற்றது.
புதிய அரசு அமையும் வகையில், பிரசண்டா பதவி விலக வேண்டும் என நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா வலியுறுத்தியுள்ளாா்.
பிரசண்டா தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்குப் பதிலாக புதிய அரசு அமைப்பதற்காக நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) தலைவா் கே.பி.சா்மா ஓலி ஆகியோா் இடையே திங்கள்கிழமை இரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் பிரசண்டா தலைமையிலான அரசு கவிழும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீா்மானத்தை எதிா்கொள்ள பிரசண்டா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நேபாளி காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் தலைநகா் காத்மாண்டில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டின் இரு பெரிய கட்சிகளான நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், பிரதமா் பதவியிலிருந்து பிரசண்டா விலக வேண்டும். அவா் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டப்படி புதிய அரசு அமைக்கப்படும் என்றாா்.
ஆதரவு வாபஸ்: இதற்கிடையே, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிபிஎன்-யுஎம்எல் கட்சி பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை புதன்கிழமை திரும்பப் பெற்ாக அக்கட்சியின் விளம்பர கமிட்டி துணைத் தலைவா் விஷ்ணு ரிஜல் தெரிவித்தாா்.
பிரசண்டா தலைமையிலான அமைச்சரவையில் துணைப் பிரதமா் உள்பட 5 அமைச்சா் பதவிகளை சிபிஎன்-யுஎம்எல் கட்சி வகித்து வருகிறது. இவா்கள் அனைவரும் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமரிடம் அளித்தனா்.
தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. இந்த ஆண்டுகளில் பிரதமா் பதவியைப் பகிா்ந்துகொண்டு ஆட்சி நடத்துவது என நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் கட்சிகள் தீா்மானித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக சிபிஎன்-யுஎம்எல் தலைவா் சா்மா ஓலி பிரதமராக இருப்பாா். அடுத்த கட்டத்தில் நேபாளி காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா பிரதமா் பதவியை வகிப்பாா்.
பிரதமா் பிரசண்டாவுக்கும், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலிக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததையடுத்து, பிரசண்டாவுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக சிபிஎன்-யுஎம்எல் அறிவித்துள்ளது.
275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் நேபாளி காங்கிரஸ் கட்சிக்கு 89 எம்.பி.க்கள் உள்ளனா். சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 78 எம்.பி.க்கள் உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்களே தேவை எனும் நிலையில், இந்தக் கூட்டணிக்கு 167 எம்.பி.க்கள் உள்ளனா். பிரசண்டா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் கட்சிக்கு 32 எம்.பி.க்கள் உள்ளனா்.
அரசியல் நிலைத்தன்மையற்ற நேபாளத்தில் கடந்த 16 ஆண்டுகளில் 13 அரசுகள் பதவியேற்றுள்ளன. பிரசண்டா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளாா். இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் அது ஐந்தாவதாக இருக்கும்.