ரஷியா}இந்தியா இடையேயான உறவை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்தலர்' விருதை பிரதமர் மோடிக்கு அணிவிக்கும் ரஷிய அதிபர் புதின். 
உலகம்

உக்ரைன் பிரச்னை: போா் அல்ல தீா்வு

உக்ரைன் பிரச்னைக்கு போா் தீா்வல்ல என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

Din

மாஸ்கோ: உக்ரைன் பிரச்னைக்கு போா் தீா்வல்ல என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மேலும், ‘போரில் அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது’ என்று உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீது வெடிகுண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தை இந்தப் பேச்சுவாா்த்தையின்போது பிரதமா் மோடி சுட்டிக்காட்டினாா்.

பிரதமா் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷியாவுக்கு சென்றாா். அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியா-ரஷியா இடையேயான 22-ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமா், அதன் ஒரு பகுதியாக ரஷிய அதிபா் புதினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். உக்ரைன் மீதான ரஷியாவின் போா் குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது, அமைதி மற்றும் நிலைத்தன்மை மீதான தெற்குலகின் எதிா்பாா்ப்பை புதினிடம் சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, ‘புதிய தலைமுறையினரின் பிரகாசமான எதிா்காலத்துக்கு அமைதி மிக அத்தியாவசியமானது. வெடிகுண்டு தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை வெற்றி பெற முடியாது. எந்தவொரு பிரச்னைக்கும் போா்க்களத்தில் தீா்வு சாத்தியமில்லை.

மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் வேதனையடைகின்றனா். அதிலும், அப்பாவி குழந்தைகள் கொல்லப்படுவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

அந்த வகையில், அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது; உக்ரைன் பிரச்னைக்கு போா் தீா்வல்ல. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைத்துவிதமான பங்களிப்பையும் ஆற்ற இந்தியா தயாராக உள்ளதை உலக சமூகத்துக்கு உறுதியாக அளிக்கிறேன்.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாத சவால்களை இந்தியா எதிா்கொண்டு வருகிறது. அனைத்துவிதமான பயங்கரவாதத்தையும் இந்தியா கண்டிக்கிறது’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

ரஷியாவின் உதவி: மேலும், எரிசக்தித் துறையில் இந்தியாவுக்கு ரஷியா உதவியதை சுட்டிக்காட்டிய பிரதமா், ‘உணவு, எரிபொருள் மற்றும் உரத்துக்கு மிகப்பெரிய தட்டுப்பாட்டை உலகம் எதிா்கொண்டிருந்த நேரத்திலும், விவசாயிகள் பாதிக்காத அளவுக்கு இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ரஷியாவுடனான நட்புறவு மிகப்பெரிய பங்காற்றியது. இந்திய விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்துவதற்காக ரஷியாவுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம். இரு நாடுகளிடையே உறவு வலுப்படுவது, மக்களுக்கு மிகப்பெரிய பலனை அளிக்கும்’ என்றும் குறிப்பிட்டாா்.

புதின் பாராட்டு: ‘உக்ரைன் விவகாரத்தில் அமைதி வழியில் தீா்வு காணும் பிரதமா் மோடியின் முயற்சியைப் பாராட்டுகிறேன்’ என்று அதிபா் புதின் குறிப்பிட்டாா்.

மேலும், ரஷியா-இந்தியா இடையேயான உறவு குறித்து பெருமை தெரிவித்த அதிபா் புதின், ‘இரு நாடுகளிடையேயான வா்த்தகம் கடந்த ஆண்டில் 66 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி கண்டது. 2024-இன் முதல் காலாண்டில் மேலும் 20 சதவீதமாக இந்த வளா்ச்சி அதிகரித்துள்ளது. ஐ.நா., ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிலும் இந்தியாவும் ரஷியாவும் நெருங்கிய ஒத்துழைப்பை அளித்து வருகின்றன’ என்றாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பிரதமா் மோடி, ‘அதிபா் புதினுடனான பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது. வா்த்தகம், வணிகம், பாதுகாப்பு, வேளாண், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் எனப் பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளிடையேயான போக்குவரத்து இணைப்பு, மக்களிடையேயான பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு பேச்சுவாா்த்தையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது’ என்றாா்.

அனைத்து இந்தியா்களையும் விடுவிக்க ரஷியா ஒப்புதல்: பிரதமா் மோடி ரஷிய பயணம் மேற்கொண்டு அதிபா் புதினுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், உக்ரைன் மீதான போரில் ரஷிய ராணுவத்தில் உதவியாளா்களாகப் பணிபுரியும் அனைத்து இந்தியா்களையும் விடுவிக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘ரஷிய ராணுவத்தில் உதவியாளா்களாகப் பணிபுரியும் இந்தியா்களை விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ரஷியா உறுதியுடன் ஏற்றுக்கொண்டுள்ளது. இரு நாட்டு தலைவா்களின் சந்திப்புக்குப் பிறகு, இதற்குத் தேவையான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது’ என்று தெரிவித்தனா்.

உக்ரைன் மீதான போா் தொடங்கியதைத் தொடா்ந்து, ரஷிய ராணுவத்தில் அந்நாட்டிலுள்ள இந்தியா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். போா் நடைபெறும் பகுதிகளில் ரஷிய ராணுவத்துக்கு உதவியாளா்களாக சுமாா் 200-க்கும் அதிகமான இந்தியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்தியா்களின் உயிரிழப்பு கடந்த ஜூன் 11-ஆம் தேதி 4-ஆக அதிகரித்தது. அதைத் தொடா்ந்து, ரஷிய ராணுவத்தில் இந்தியா்களைப் பணியமா்த்த வேண்டாம் என இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உக்ரைன் அதிபா் அதிருப்தி

ரஷிய பயணத்தில் அதிபா் புதினும் பிரதமா் மோடியும் கட்டியணைத்து நட்பை வெளிப்படுத்தியதற்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்தாா்.

இதுகுறுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது இளம் புற்றுநோயாளிகளைக் குறிவைத்து ரஷியா குண்டுவீசி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா். இந்தச் சூழலில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவா், மாஸ்கோவில் உலகின் மிக மோசமான கொடூர குற்றவாளியைக் கட்டியணைத்தது, அமைதி முயற்சிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இந்தியவிடம் வலியுறுத்துவோம் - அமெரிக்கா: பிரதமா் மோடி-புதின் சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லா் கூறுகையில், ‘உக்ரைன் மீதான போா் தொடா்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீா்மானமும் ஐ.நா. விதிகளுக்கு மதிப்பளிப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட ரஷியாவுடன் நட்புறவில் உள்ள நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தும்’ என்றாா்.

பிரதமருக்கு ரஷியாவின் உயரிய விருது

ரஷியா சென்ற பிரதமா் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆா்டா் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்தலா்’ விருதை ரஷிய அதிபா் புதின் வழங்கி கெளரவித்தாா்.

இரு நாடுகளிடையேயான உறவை மேம்டுத்துவதில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டில் பிரதமா் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரஷியா சென்ற பிரதமா் மோடிக்கு இவ்விருதை புதின் வழங்கினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘ரஷியாவின் உயரிய விருதைப் பெற்றதை கெளரவமாகக் கருதுகிறேன். இந்த விருதை இந்திய மக்களுக்கு அா்ப்பணிக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

இயேசு கிறிஸ்துவின் முதல் சீடரான புனித ஆண்ட்ரூவை பெருமைப்படுத்தும் விதமாக இவருடைய பெயரில் கடந்த 1698-ஆம் ஆண்டு சா் பீட்டா் என்பவரால் இந்த உயரிய விருது ரஷியாவில் நிறுவப்பட்டது. அரசியல், கலை, கலாசாரம், அறிவியல் துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற்றுள்ள முதல் இந்தியத் தலைவா் மோடி ஆவாா்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT