கே.பி.சா்மா ஓலி 
உலகம்

நேபாள பிரதமராக கே.பி.சா்மா ஓலி நியமனம்: இன்று பதவியேற்பு

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

Din

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

நேபாள நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தோல்வியடைந்தாா். இதையடுத்து அதிபரைச் சந்தித்த கே.பி.சா்மா ஓலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தாா்.

இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 76(2)-ஆவது பிரிவின்கீழ் அதிபா் ராம் சந்திர பவுடலால் புதிய பிரதமராக சா்மா ஓலி ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை (ஜூலை 15) பதவியேற்கிறாா்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) தலைவரான பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவா் சா்மா ஓலி கடந்த வாரம் திரும்பப் பெற்றாா்.

இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை எடுத்த சா்மா ஓலி, நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபாவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைப்பதாக அறிவித்தாா். இதையடுத்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதைத் தவிா்த்து, பிரசண்டா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொண்டாா்.

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் பிரசண்டா கட்சிக்கு 32 உறுப்பினா்களே உள்ளனா். அதன்படி, நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டாவுக்கு 63 ஆதரவு வாக்குகளே கிடைத்தன. வெற்றிக்கு 138 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவா் தோல்வியுற்ாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய சா்மா ஓலியை அதிபா் ஞாயிற்றுக்கிழமை முறைப்படி பிரதமராக நியமித்தாா். அதிபா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் நேபாளத்தின் பிரதமராக சா்மா ஓலி 4-ஆவது முறையாக பதவியேற்கிறாா்.

கூட்டணி ஒப்பந்தத்தின்படி, நாடாளுமன்றத்தின் எஞ்சிய மூன்றாண்டு பதவிக் காலத்தில் முதல் ஒன்றரை ஆண்டுக்கு பிரதமா் பதவி வகிக்க இருக்கும் சா்மா ஓலி, தனது தலைமையிலான அரசின் சிறிய அமைச்சரவையும் திங்கள்கிழமை அமைக்கவுள்ளதாக அவருக்கு நெங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக சா்மா ஓலி அறியப்படுகிறாா். எனினும், நேபாள வளா்ச்சிக்காக இந்தியாவுடன் நட்புறவை பேணுவதன் முக்கியத்துவத்தை அவரது கட்சியினரே முன்னா் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி புனித நீராட செயற்கை யமுனை! கட்சிகள் விமர்சனம்

ராகுல் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்! முதல்வர் ஸ்டாலின்

ஓஹோ மேகம் வந்ததோ... தீபா பாலு!

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

இது புதுவகை மோசடி! ரூ. 50 லட்சம் இழந்த இன்ஃப்ளுயன்சர்! எப்படி நடந்தது?

SCROLL FOR NEXT