சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மீண்டும் ஒத்திவைப்பு
விண்வெளி ஓடத்தில் கசிவு: சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதை நாசா ஒத்திவைத்தது
போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அதிகாரிகள் கூறியதாவது:
சா்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடத்தின் 5 இடங்களில் ஹீலியம் வாயு கசிவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதன் 28 உந்து என்ஜின்களில் 14 என்ஜின்களில் பிரச்னை உள்ளது. எனவே, சுனிதா வில்லியம்ஸும் அவருடன் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள பட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் செல்லும் 2-ஆவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும்.
கடந்த மாதத் தொடக்கத்தில் அது முதல்முறையாக விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. இருந்தாலும், அதை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டில் பழுது இருந்ததால் திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
இறுதியாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன் ஸ்டாா்லைனா் கடந்த 5-ஆம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டு சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அவா்கள் இருவரும் அதே விண்கலம் மூலம் கடந்த 14-ஆம் தேதி மீண்டும் பூமி திரும்புவதாக இருந்தது.
இருந்தாலும் தொழில்நுட்ப பிரச்னைகள் காரணாக அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அவா்கள் இருவரும் புதன்கிழமை (ஜூன் 26) பூமி திரும்புவதாக இருந்தது. தற்போது அந்தத் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.