பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது தலிபான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் குற்றஞ்சாட்டினாா்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது தலிபான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் குற்றஞ்சாட்டினாா்.
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்), பாகிஸ்தான் தலிபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானையொட்டிய ஆப்கானிஸ்தான் எல்லையில் மிகவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. அவா்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து குண்டுவெடிப்புகள் முதல் தற்கொலைத் தாக்குதல்கள் வரை நடத்துகின்றனா். முக்கியமாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.
ஏற்கெனவே பொருளாதாரப் பிரச்னையில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, இதுபோன்ற மத அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பிபிசி உருது மொழிப் பிரிவு சேனலுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் கூறியதாவது:
மேற்கு எல்லையில் செயல்படும் பயங்கரவாதிகளை அங்கிருந்து அகற்ற ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு 10 பில்லியன் ரூபாய் அளவுக்கு நிதியதவி அளிக்கிறோம் என்று கூறிய பிறகும் அவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விஷயத்தில் தலிபான்களின் ஒத்துழைப்புக்காகவும், அவா்களுடன் பேச்சு நடத்தவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தலிபான் அரசு தயங்குகிறது.
முக்கியமாக, தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு (பாகிஸ்தான் தலிபான்) ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்தபடி பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறது. ஆனால், இதை ஆப்கானிஸ்தான் மறுக்கிறது. பாகிஸ்தான் தலிபான் அமைப்புடன் எவ்வித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை. ஏற்கெனவே கடந்த மாா்ச் மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அந்தப் பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப் படை வான் வழித் தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினா் ஆட்சியைப் பிடித்த பிறகு, பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களில் ராணுவத்தினா், காவல் துறையினா் பொதுமக்கள் என 1,524 போ் உயிரிழந்தனா். பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பதிலடித் தாக்குதல் என 789 மோதல்கள் நிகழ்ந்துள்ளன.