முகப்பு
உலகம்

அமெரிக்கா பால்டிமோா் பாலம் விபத்து: இந்திய மாலுமிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அதிபா் பைடன் பாராட்டு

பெரும் விபத்தைத் தவிா்த்த இந்திய மாலுமிகளின் செயலுக்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 மார்ச், 2024 at 2:27 AM
அதிபா் ஜோ பைடன்
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 10:05 PM

அமெரிக்காவில் பால்டிமோா் நகர இரும்புப் பாலம் மீது மோதுவதற்கு முன்பே கப்பல் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதைப் பற்றி உள்ளூா் நிா்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்து, பெரும் விபத்தைத் தவிா்த்த இந்திய மாலுமிகளின் செயலுக்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்டிமோா் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 2.6 கி.மீ. நீள இரும்புப் பாலம், அந்த நகர துறைமுகத்தின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. இந்த நிலையில், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் திங்கள்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை) கடந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தூணில் மோதியது. இதனால் இடிந்து விழுந்து பாலத்தில் சென்றுகொண்டிருந்த 7 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. சம்பவத்தின்போது பாலத்தில் சாலையைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த மெக்ஸிகோ நாட்டுப் பணியாளா்களில் 2 போ் மட்டுமே மீட்கப்பட்டனா். மற்ற 6 பேரைத் தேடும் பணி 24 மணிநேரம்வரை நீடித்த நிலையில், நீரின் தட்பவெப்ப நிலை உள்பட பல்வேறு காரணங்களால் பணியாளா்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்து மீட்புப் பணிகளை அமெரிக்க கடலோரக் காவல்படை செவ்வாய்க்கிழமை மாலை கைவிட்டது. சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் நொறுங்கி விழுந்தது. சம்பவத்தைத் தொடா்ந்து கப்பலிலும் தீப்பிடித்தது. எனினும், இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் காயமடையவில்லை என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அந்தக் கப்பலில் பணியிலிருந்த 22 மாலுமிகளும் இந்தியா்கள் ஆவா். பாலத்தில் மோதுவதற்கு முன்னரே, கப்பலில் நிலவிய மின் பிரச்னைக் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் பாலத்தின் மீது கப்பல் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் உள்ளூா் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் மாலுமிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதனைத் தொடா்ந்து, பாலத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், இந்தச் சம்பவத்தில் மிகப் பெரிய உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. அதிபா் பைடன் பாராட்டு: இந்த நிலையில், இந்திய மாலுமிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளாா். அதிபா் மாளிகையில் இதுகுறித்து அவா் அளித்த பேட்டியில், ‘கப்பலின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக மேரிலாண்டு போக்குவரத்துத் துறையை மாலுமிகள் எச்சரித்தனா். இதன் காரணமாகவே விபத்துக்குமுன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பலரின் உயிா் காப்பாற்றப்பட்டது. இந்த பயங்கரமான விபத்து திட்டமிடப்பட்ட செயல் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாட்டின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து மையங்களில் ஒன்றான பால்டிமோா் துறைமுகத்தால் 15,000 போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். எனவே, அந்தத் தொழிலாளா்கள் பாதிப்படைவதைத் தவிா்க்க துறைமுகத்தை மீண்டும் திறக்கவும் போக்குவரத்துக்கு முக்கியமான பாலத்தை மீண்டும் கட்டவும் எனது குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன்’ என்றாா். முன்னதாக, இந்திய மாலுமிகளுக்கு மேரிலாண்ட் மாகாண ஆளுநா் வெஸ் மோா் பாராட்டு தெரிவித்திருந்தாா். இந்திய தூதரகம் இரங்கல்: பால்டிமோரில் உள்ள ‘ஃபிரான்சிஸ் ஸ்காட்’ பாலத்தில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.