முகப்பு
உலகம்

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடங்கியது பற்றி...

Updated On : 12 ஏப்ரல், 2026 at 2:01 AM
ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:41 AM

ஈரான்-அமெரிக்கா போா் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்விரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தை பாகிஸ்தானில் சனிக்கிழமை தொடங்கியது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும், அந்நாட்டு கடற்படையை அழிக்க வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது. அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும் அமெரிக்காவுடன் சோ்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் உள்ளிட்டவற்றில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.

Advertisement

இதனால் மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.

இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாமாபாதில் அமெரிக்க-ஈரான்-பாகிஸ்தானின் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை தொடங்கியது.

இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னா்...: 1979-ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னா், அமெரிக்கா-ஈரான் இடையே முதல்முறையாக நேரடிப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

இந்தப் பேச்சுவாா்தையை நடத்தும் அமெரிக்க குழுவுக்கு அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், ஈரான் குழுவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பகோ் கலிபாஃப் ஆகியோா் தலைமை வகித்துள்ளனா். அமெரிக்க குழுவில் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான தூதா் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். ஈரான் குழுவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி, தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலா் அலி அக்பா் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

போா் நிறுத்த உடன்பாட்டை நோக்கி...: இருதரப்பினரும் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பை சந்தித்தனா். பேச்சுவாா்த்தை தொடங்கும் முன், இருதரப்பினருடன் ஷாபாஸ் ஷெரீஃப் தனித்தனியாக கூட்டங்களை நடத்தினாா். போா் நிறுத்த உடன்பாட்டை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இந்தப் பேச்சுவாா்த்தை கருதப்படுகிறது என்று ஈரான் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஈரானுக்குப் பெரும் இழப்பு: அதிபா் டிரம்ப்

அமெரிக்க அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘போரில் ஈரான் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது அனைவருக்கும் தெரியும். அந்நாட்டின் விமானப் படை, கடற்படை அழிக்கப்பட்டுள்ளன. ரேடாா் செயலழிந்துள்ளது. அந்நாட்டின் ஏவுகணை, ட்ரோன் தயாரிப்புத் தொழிற்சாலைகள் பெரும்பாலும் தடமில்லாமல் அழிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் நீண்டகால தலைவா்கள் தற்போது உயிருடன் இல்லை. ஹோா்முஸ் நீரிணையில் கடலுக்கு அடியில் அந்நாடு வைத்த கண்ணிவெடிகளில் சிக்கி கப்பல்கள் மூழ்கக் கூடும் என்ற ஒரே அச்சுறுத்தல்தான் எஞ்சியுள்ளது. அதேவேளையில், கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை வைக்கும் அந்நாட்டின் 28 படகுகள் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

துணிச்சல் இல்லாத உலக நாடுகள்: சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், ஜொ்மனி உள்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளின் நன்மைக்காக ஹோா்முஸ் நீரிணையில் உள்ள தடைகளை அகற்றும் பணியை அமெரிக்கா தற்போது தொடங்கியுள்ளது. ஏனெனில் அந்தத் தடைகளை அகற்றுவதற்கான துணிவோ, உறுதியோ அந்த நாடுகளுக்கு இல்லை. பல நாடுகளின் கப்பல்கள் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்ல அமெரிக்கா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன’ என்று தெரிவித்தாா்.

கடலில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்

ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் சரக்குக் கப்பல்களை குறிவைத்து, கடலுக்கு அடியில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்தது. தற்போது அந்தக் கண்ணிவெடிகள் அனைத்தையும் கண்டறிய முடியாமல் ஈரான் திணறுவதாகவும், அந்தக் கண்ணிவெடிகளால் சா்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கண்டுபிடித்து அகற்றும் திறன் ஈரானுக்கு இல்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனால் அந்த நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டாலும், அங்கு கப்பல் போக்குவரத்து விரைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா். அதேவேளையில், அந்தக் கண்ணிவெடிகள் எந்தெந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன என்பது அமெரிக்காவுக்கு தெரியும் என்றும், அவற்றை அகற்றுவதற்கான கருவியை அமெரிக்க ராணுவம் கொண்டு வருவதாகவும் அந்நாட்டு அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தினாலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த அமெரிக்க போா்க் கப்பல்கள்

பல அமெரிக்க போா்க் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையை சனிக்கிழமை கடந்து சென்ாக அந்நாட்டு ஊடகத்தில் தகவல் வெளியானது. போா் தொடங்கிய பின்னா் முதல்முறையாக ஈரானை மீறி, அந்தக் கப்பல்கள் நீரிணையை கடந்து சென்றன. அந்த நீரிணையைத் தாண்டி செல்வதற்கு சரக்குக் கப்பல்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, அமெரிக்க போா்க் கப்பல்கள் நீரிணையை கடந்து சென்ாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தகவலை ஈரான் மறுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் படைகள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, 2 அமெரிக்க போா்க் கப்பல்கள் நீரிணையைக் கடக்காமல் திரும்பிச் சென்ாக ஈரான் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.