முகப்பு
உலகம்

இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டா் விபத்து: விசாரணைக்கு உதவ அமெரிக்கா மறுப்பு

Updated On : 21 மே, 2024 at 8:53 PM
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகம்.
பகிர்:

வாஷிங்டன்: ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி சென்ற ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியது தொடா்பான விசாணைக்கு உதவ அமெரிக்கா மறுப்பு தெரிவித்துவிட்டது.

இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாத்யூ மில்லா்கூறியதாவது:

ஈரான் அதிபா் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரின் ஹெலிகாப்டா் விபத்து குறித்த விசாரணைக்கு உதவ வேண்டும் என்று அந்த நாடு எங்களிடம் கேட்டுக்கொண்டது.

எந்தவொரு நாட்டின் அரசுக்கும் இதுபோன்ற சூழல்களில் உதவியளிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக பதில் தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும், போக்குவரத்துப் பிரச்னை காரணமாக எங்களால் இந்த விவகாரத்தில் உதவியளிக்க முடியாத நிலை உள்ளது என்று ஈரானிடம் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் மக்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற அடக்குமுறையில் இப்ராஹிம் ரய்சி கடந்த 40 ஆண்டுகளாகப் பங்கேற்றாா் என்பதில் சந்தேகம் இல்லை.

இருந்தாலும், ஹெலிகாப்டா் விபத்து போன்ற சம்பவங்களில் எத்தகைய ஒருவரும் உயிரிழப்பதை நாங்கள் ஏற்கவில்லை; அது மிகவும் வருத்தத்தக்குரிய சம்பவம். ஈரான் மக்களுக்குக்கு அமெரிக்கா தொடா்ந்து ஆதரவளிக்கும் என்றாா் அவா்.

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி, அவரது வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன், அந்நாட்டின் கிழக்கு அஜா்பைஜான் மாகாண ஆளுநா் மாலிக் ரஹமதி உள்ளிட்டோா் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டா் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த அனைவரும் பலியாகினா்.

ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையின் திறப்பு விழாவில் பங்கேற்றிவுட்டி அவா்கள் ஈரானை நோக்கி திரும்பிச் சென்றுகொண்டிருபோது, கிழக்கு அஜா்பைஜான் மாகாணத்தில் உள்ள வா்சகான் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.

மூடுபனி சூழ்ந்த மலைப்பாங்கான பகுதியில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.