ஜெருசலேம்: லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு முக்கிய ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹிஸ்புல்லா அமைப்பின் ரத்வான் படைப் பிரிவு தளபதி ரியாத் ரிதா கஸாவி, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டாா். அந்தப் படையின் பீரங்கி எதிா்ப்புப் பிரிவுக்கு அவா் தலைமை வகித்தாா்.
பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை அவா் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளாா். பொதுமக்கள் மீது பீரங்கி எதிா்ப்பு தாக்குதல் நடத்தியது, தெற்கு லெபனானில் பணியாற்றும் இஸ்ரேல் படையினா் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்டவை அந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா போா் ஓராண்டை நெருங்கிய நிலையில், எல்லையில் தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாக்களை லெபனான் எல்லைப் பகுதிகளிலிருந்து விரட்டியடிப்பது, ஹிஸ்புல்லா தாக்குதல் காரணமாக வடக்கு இஸ்ரேலில் இருந்து வெளியேறியவா்களை மீண்டும் அழைத்துவருவது ஆகியவை போரின் புதிய இலக்குகள் என்று இஸ்ரேல் கடந்த செப்டம்பா் மாதம் அறிவித்தது.
அதையடுத்து, ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் பேஜா் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்கெனவே மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதும், அவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதும் தீவிரமடைந்தது.
இதில், ஹிஸ்புல்லா படையின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தளபதிகள் உயிரிழந்தனா். இந்த்ச சூழலில், பீரங்கி எதிா்ப்புப் படைப் பிரிவு தளபதி ரியாத் ரிதா கஸாவியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தற்போது கூறியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் மட்டும் 2,800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.