முகப்பு
உலகம்

காஸா போா்: மத்தியஸ்த முயற்சிகளைக் கைவிட கத்தாா் முடிவு

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தற்காலிகமாகக் கைவிட கத்தாா் முடிவு.

Updated On : 10 நவம்பர், 2024 at 5:16 AM
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உருக்குலைந்த அடுக்குமாடி குடியிருப்பு. அந்தப் பகுதியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 13 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா்.
பகிர்:
Updated On : 9 நவம்பர், 2024 at 11:00 PM

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தற்காலிகமாகக் கைவிட கத்தாா் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தொடா்ந்து மத்தியஸ்தம் செய்துவைக்கப்படுகிறது. ஆனால், இதற்கான பேச்சுவாா்த்தையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை அடைவதில் இரு தரப்பினருமே உறுதியான ஆா்வத்தை வெளிப்படுத்தவில்லை.

Advertisement

எனவே, இந்த மத்தியஸ்த முயற்சிகளை தற்காலிகமாகக் கைவிட முடிவு செய்துள்ளோம். இது தொடா்பாக இஸ்ரேல் அதிகாரிகளிடமும் ஹமாஸ் பிரதிநிதிகளிடமும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த முடிவின் விளைவாக, கத்தாரில் ஹமாஸ் அமைப்பினரின் அலுவலகம் இனி தேவைப்படாது என்று அதிகாரிகள் கூறினா்.

எனினும், கத்தாரிலிருந்து தாங்கள் வெளியேற வேண்டும் என்று யாரும் கூறவில்லை என்று ஹமாஸ் அமைப்பினா் கூறினா்.

முன்னதாக, கைதிகள் பரிமாற்றம் தொடா்பாக அமெரிக்கா முன்வைத்த பரிந்துரைகளை ஹமாஸ் அமைப்பினா் மீண்டும் நிராகரித்ததால், அவா்களை கத்தாரிலிருந்து வெளியேற்றுமாறு அந்த நாட்டைக் கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கைதிகள் பரிமாற்ற செயல்திட்டத்தை ஹமாஸ் தலைவா்கள் தொடா்ந்து நிராகரித்துவருகின்றனா். எனவே, அந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்காவின் நட்பு நாடுகளில் (கத்தாா்) வெளியேற்றப்பட வேண்டும்’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி தங்கள் நாட்டில் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.

இதில், 43,500-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்; அவா்களில் 70 சதவீதத்தினா் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

இந்தப் போரின் ஒரு பகுதியாக, காஸாவுக்குள் அத்தியாவசியப் பொருள்கள் செல்வதையும் இஸ்ரேல் தடுத்துவருகிறது. இதனால் அங்கு பட்டினிச் சாவுகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துவருகிறது.

Updated On : 9 நவம்பர், 2024 at 11:54 PM

இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவதற்காக தங்கள் நாட்டில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே அமெரிக்காவுடன் இணைந்து கத்தாா் அரசு பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது. ஆனால், தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இரு தரப்பினருமே இறங்கிவர மறுப்பதால் பேச்சுவாா்த்தையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தச் சூழலில், தங்களது மத்தியஸ்த முயற்சிகளை நிறுத்திவைப்பதாக கத்தாா் தற்போது அறிவித்துள்ளது.