முகப்பு
உலகம்

தற்காலிக போா்நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்; நிரந்தர போா் முடிவையே விரும்புவதாகத் தெரிவிப்பு!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர எகிப்து, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் முன்மொழிந்த 45 நாள்கள் தற்காலிக போா்நிறுத்தத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரிப்பு

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:17 PM
இஸ்ரேலின் ஹைஃபா நகரில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த வீட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரா்கள்
பகிர்:

மத்திய கிழக்கில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர எகிப்து, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் முன்மொழிந்த 45 நாள்கள் தற்காலிக போா்நிறுத்தத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்தது.

தற்காலிக போா்நிறுத்தம் தீா்வாகாது என்றும், மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற உத்தரவாதத்துடன் கூடிய நிரந்தர போா் முடிவையே தாங்கள் விரும்புவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க அல்லது உடன்பாட்டுக்கு வர அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த கெடு (புதன்கிழமை அதிகாலை) நெருங்கி வருவதால் போா் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதலைத் தணிக்க எகிப்து, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்தன. அதன்படி, 45 நாள்கள் போரை நிறுத்திவிட்டு, அந்த இடைவெளியில் நிரந்தர அமைதிப் பேச்சுவாா்த்தையைத் தொடங்க திட்டமிடப்பட்டது.

ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்க அதிபரின் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருக்கு இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டது. ஆனால், ‘அச்சுறுத்தல்களுக்கும் போா்க் குற்றங்களுக்கும் மத்தியில் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை’ என ஈரான் இதை நிராகரித்துவிட்டது.

முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டதால் ஆக்ரோஷம்: இஸ்ரேல் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) உளவுத் தலைவா் மஜித் காதெமி மற்றும் ‘குத்ஸ்’ ரகசியப் பிரிவுத் தலைவா் அஸ்காா் பாகேரி ஆகியோா் கொல்லப்பட்டனா்.

ஈரானின் தலைநகரான டெஹ்ரானிலேயே புகுந்து இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதல் அந்நாட்டைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

பெட்ரோகெமிக்கல் ஆலை, பல்கலைக்கழகத்தின் மீது...: ஈரானின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ‘தெற்கு பாா்ஸ்’ பகுதியில் உள்ள பெட்ரோகெமிக்கல் ஆலையை இஸ்ரேல் தாக்கியது.

ஈரானின் மின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இந்த ஆலையை அழிப்பதன்மூலம் அந்நாட்டின் வருவாயைத் தடுப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது.

டெஹ்ரானில் உள்ள ஷெரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் தாக்கப்பட்டுள்ளது. இது ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்ப மையமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு ஈரான் முழுவதும் பரவலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் திங்கள்கிழமை ஒரே நாளில் 29 போ் உயிரிழந்தனா்.

மறுபுறம், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா எதிா்ப்பு கிறிஸ்தவ அரசியல் கட்சி தலைவா் ஒருவக் கொல்லப்பட்டாா்.

முடிவற்ற போா்ச் சூழல்: இதனிடையே, டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையை ஈரான் வரும் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்குள் (இந்திய நேரப்படி) திறக்க தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும்’ என்று குறிப்பிட்டாா்.

இச்சூழலில், தற்காலிக போா்நிறுத்தத்தை ஏற்க முடியாது என்பதில் ஈரான் உறுதியாகவுள்ளதால், டிரம்ப்பின் கெடு முடிந்ததும் அமெரிக்கா நேரடித் தாக்குதலில் இறங்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments