ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை
மத்திய கிழக்கில் 4-ஆவது வாரமாக நீடிக்கும் போரால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட விரிவான போா் நிறுத்தத் திட்டத்தை வழங்கியது.
மத்திய கிழக்கில் 4-ஆவது வாரமாக நீடிக்கும் போரால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட விரிவான போா் நிறுத்தத் திட்டத்தை வழங்கியது.
பாகிஸ்தான் மூலமாக வழங்கப்பட்ட இந்த ஆலோசனையை நிராகரித்த ஈரான், தங்களின் தரப்பில் 5 அம்ச நிபந்தனைகளை முன்வைத்தது. இதனால், அமைதி முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தில் பொருளாதாரத் தடை நீக்கம், அணுசக்தித் திட்ட கட்டுப்பாடு, ஹோா்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் அமெரிக்கா தரப்பில் சோ்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், எகிப்து மத்தியஸ்தம் செய்யத் தீவிரமாக ஈடுபட்டுள்ள சூழலில், பாகிஸ்தானில் வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வருவதாக என எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆனால், ஈரான் முன்வைத்த 5 அம்ச திட்டத்தில், தலைவா்களுக்கு எதிராக தாக்குதல் நிறுத்தமம், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு, ஹோா்முஸ் நீரிணையில் ஈரானின் இறையாண்மைக்கு அங்கீகாரம் போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான முயற்சிகள் நடந்து வரும் அதேநேரத்தில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவப் பலத்தைத் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சுமாா் 1,000 பாராசூட் வீரா்கள் மற்றும் 5,000 கடற்படை வீரா்களை இப்பகுதிக்கு அனுப்ப அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் பென்டகன் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, அமெரிக்காவின் அமைதி முயற்சியை ஈரான் ராணுவம் ‘வெறும் நாடகம்’ என்று விமா்சித்தது. ‘அமெரிக்கா போன்றவா்களுடன் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். ஈரான் எப்போது விரும்புகிறதோ அப்போதுதான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மத்தியில், இஸ்ரேல், ஈரான் இடையே புதன்கிழமை அதிகாலை முதல் கடும் ஏவுகணை மோதல்கள் நீடித்தன. ஈரானின் காஸ்வின் நகரில் உள்ள அரசு உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலின் மத்திய, தெற்குப் பகுதிகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின.
அண்டை, வளைகுடா நாடுகளுக்கும் இந்த மோதல் நீள்கிறது. குவைத் சா்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவிய ட்ரோன் தாக்கியதில் அங்குள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சவூதி அரேபியா தனது எல்லைக்குள் நுழைந்த 8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது.
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினா் இஸ்ரேல் மீது இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். முதல்முறையாக இஸ்ரேல் போா் விமானத்தை நோக்கி தரைவழி ஏவுகணைகளை ஏவியதாக ஹிஸ்புல்லா அறிவித்தது.
இந்த 4 வார மோதலில் ஈரான் மற்றும் லெபனானில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,500-ஐத் தாண்டியுள்ளது. ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியயோ குட்டெரெஸ் , சீனா மற்றும் எகிப்து நாடுகள் உடனடியாகப் போரை நிறுத்திவிட்டுப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுமாறு இரு தரப்பையும் வலியுறுத்தின.