வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 93 பேர் பலி
காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 93 பேர் பலி.
காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 93 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
வடக்கு காஸாவின் பெயிட் லாஹியா பகுதியில் நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 40 பேர் மாயமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
நேற்று இரவு காஸாவின் வடக்குப் பதியிலுள்ள பெயிட் லாஹியாவின் குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை
இது தொடர்பாக பேசிய செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாஸல், பெயிட் லாஹியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 93 பேர் உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளில் 40 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களை அனுமதிக்க மருத்துவமனைகளிலும் போதிய இடங்கள் இல்லாத சூழலே காஸாவில் நிலவுகிறது.
இது குறித்து பேசிய கமல் அத்வான் மருத்துவமனை இயக்குநர் ஹூஸாம் அபு சாஃபியா, தாக்குதலில் உயிரிழந்த 15 பேரின் உடல்கள் அத்வான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. இன்னும் பல உடல்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளது. படுகாயமடைந்தவர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாமலும், போதிய மருந்துகள் இல்லாமலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி மருந்துகளைத் தவிர எங்கள் மருத்துவமனையில் வேறு எதுவும் இல்லை. ஜபாலியாவில் நடந்த இஸ்ரேல் படையினரின் ஆக்கிரமிப்பின்போது எங்கள் மருந்துகளை சூறையாடியதுடன் மருத்துவப் பணியாளர்களையும் ராணுவத்தினர் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் சிகிச்சை அளிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
வடக்கு காஸாவில் கடந்த 19 நாள்களில் மட்டும் 770 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் மருந்துகள் அனுப்பி வைப்பு! -மத்திய அரசு