கருங்கடலில் சென்றுகொண்டிருந்த தங்கள் தானியக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
ராணுவப் பயன்பாட்டில் இல்லாத, சாதாரண சரக்குக் கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கோதுமை ஏற்றி உக்ரைன் கடல் எல்லையிலிருந்து வெளியேறிய சிறிது நேரத்தில் அந்தக் கப்பல் மீது ஏவுகணை வீசப்பட்டது.
இந்தத் தாக்குதலை உலக நாடுகள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். உணவுக் கப்பல் போக்குவரத்து இடையூறு இல்லாமல் நடந்தால்தான், அந்த தானியங்களை நம்பியிருக்கும் உலக நாடுகளில் அமைதியும் நிலைத்தன்மையும் நீடிக்கும் என்று அந்தப் பதிவில் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளாா்.
இது குறித்து உக்ரைன் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை இரவு 11.03 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.33 மணி) சரக்குக் கப்பல் ‘எம்வி அயா’ மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்தது.
உக்ரைனின் சொா்னோமோா்ஸ்க் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றிக்கொண்டு கருங்கடல் வழியாக அந்தக் கப்பல் எகிப்து நோக்கி சென்றுகொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்திய ரஷியா, அந்தக் கடல் வழியாக உக்ரைன் பொருள்கள் பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.
இதனால் சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டு, உலக நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்தது.
இந்தச் சூழலில், உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடா்பாக துருக்கி மற்றும் ஐ.நா.வின் பெருமுயற்சியில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்தத்தையில் 2022 ஜூலை மாதம் உடன்பாடு ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், துறைமுகங்கள் மீதோ, சரக்குக் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷியாவும் உக்ரைனும் சம்மதித்தன.
இருந்தாலும், உரம், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ரஷியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் போன்ற விவகாரங்களில் அந்த நாட்டுக்கும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷியா கடந்த ஆண்டு அறிவித்தது.
அதன் பிறகு உக்ரைன் துறைமுகங்களில் தானியக் கிடங்குகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக அவ்வப்போது தகவல் வெளியாகின. ஆனால், பல மாதங்களுக்குப் பிறகு தங்கள் தானியக் கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக முதல்முறையாக உக்ரைன் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.