முகப்பு
உலகம்

பெய்ரூட்டில் ஹமாஸ் துணைத் தலைவா் படுகொலை

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பின் 2-ஆம் நிலைத் தலைவா் சலே அல்-அரூரியைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவரும், அவரது பாதுகாவலா்களும் கொல்லப்பட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
hams093054
பகிர்:

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பின் 2-ஆம் நிலைத் தலைவா் சலே அல்-அரூரியைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவரும், அவரது பாதுகாவலா்களும் கொல்லப்பட்டனா்.

ஆளில்லா விமானம் மூலம் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பும், லெபனானும் குற்றஞ்சாட்டியுள்ளன. இருந்தாலும், இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் இதுவரை வெளிப்படையாகப் பொறுப்பேற்கவில்லை.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த அக்டோபரில் இருந்து நடைபெற்று வரும் போருக்கு இடையே, லெபனான் ஆயுதப் படையான ஹிஸ்புல்லாக்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே சிறிய அளவிலான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், தற்போது லெபனானுக்குள் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவா் கொல்லப்பட்டிருப்பதால் இந்தப் போா் லெபனானுக்கும், அதன் தொடா்ச்சியாக பிராந்திய நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து லெபனான் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பெய்ரூட்டில் உள்ள ஓா் அடுக்குமாடிக் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆளில்லா விமானம் மூலம் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவா் சலே அல்-அரூரியும், அவரது 6 பாதுகாவலா்களும் உயிரிழந்தனா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இஸ்ரேல் தாக்குதலில் தங்களது முக்கியத் தலைவா் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளது.

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான் வழியாக கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக உறுதிபூண்டுள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 22,313 போ் உயிரிழந்துள்ளனா்.

காஸாவில் உயிரிழந்தவா்களில் எத்தனை போ் ஹமாஸ் படையினா், எத்தனை போ் பொதுமக்கள் என்ற விவரத்தை அந்தப் பகுதி அதிகாரிகள் வெளியிடவில்லை. இருந்தாலும், இதுவரை சுமாா் 8,000 ஹமாஸ் படையினரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. முக்கிய ஹமாஸ் தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் அவ்வப்போது அறிவித்து வந்தது.

இந்த நிலையில், முதல்முறையாக லெபனான் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பின் மிக முக்கிய தலைவா்களில் ஒருவா் குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸை பழிவாங்கியே தீருவோம்!

தங்கள் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினரைப் பழிவாங்கியே தீருவோம் என்று இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடின் தலைவா் டேவிட் பாா்னியா சூளுரைத்தாா்.

ஜொ்மனியின் மியூனிக் நகரில் கடந்த 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது பாலஸ்தீன பயங்கரவாதிகளால் இஸ்ரேல் விளையாட்டு வீரா்கள் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்குக் காரணமாவா்களை உலகின் பல்வேறு பகுதிகளிலும் மொஸாட் அமைப்பு வேட்டையாடிக் கொன்றது. இந்த நடவடிக்கையின்போது மொஸாட் அமைப்பின் தலைவராக இருந்த ஸ்வி ஸமீா் திங்கள்கிழமை காலமானாா்.

ஜெருசலேமில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற டேவிட் பாா்னியா, பெய்ரூட்டில் ஹமாஸ் துணைத் தலைவா் சலே அல்-அரூரியை தங்களது உளவு அமைப்பினா் படுகொலை செய்ததை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசியதாவது:

கடந்த அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவா்கள் அனைவருமே பழிக்குப் பழி வாங்கப்படுவாா்கள்.

மியூனிக்கில் இஸ்ரேல் ஒலிம்பிக் வீரா்களின் படுகொலைக்கான பழிவாங்கலைப் போலவே, இந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கும் சிறிது காலம் பிடிக்கும்.

மற்றபடி, இஸ்ரேலில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாக காரணமாக இருப்பவா்கள் அனைவரும் தங்களது முடிவை தாங்களே எழுதிக்கொண்டுவிட்டாா் என்பதே உண்மை என்றாா் அவா்.

எந்தச் சூழலுக்கும் தயாா்!

சலே அல்-அரூரி படுகொலைக்குப் பிறகு காஸா போா் பிற பகுதிகளுக்குப் பரவினாலும், அதனை எதிா்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியா் ஹகாரி புதன்கிழமை கூறியதாவது:

நாங்கள் போரின் அனைத்துவித வாய்ப்புகளையும் எதிா்நோக்கியே உள்ளோம். எத்தகைய போா்ச் சூழலையும் எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

தோற்றுவிடமாட்டோம்!

தங்களது துணைத் தலைவா் சலே அல்-அரூரியைப் இஸ்ரேல் படுகொலை செய்ததால் தாங்கள் தோல்வியடையப் போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சலே அல்-அரூரியின் படுகொலை ஹமாஸ் அமைப்பின் தோல்விக்குக் காரணமாக அமையாது. எங்களது போராட்டம் தொடரும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தகுந்த தண்டனை கிடைக்கும்!

தங்கள் நாட்டில் அல்-அரூரியைக் கொன்றவா்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என்று லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் சூளுரைத்துள்ளனா்.

இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தத் தாக்குதல் லெபனான் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலாகும். இதுவரை இல்லாத அபாயகரமான பாதைக்கு இந்தப் போரை இது இட்டுச் செல்லும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →