அமெரிக்காவுடன் இணக்கமான வா்த்தகத்தை மேற்கொள்ளாததால் அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயா்த்தப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா்.
முன்னதாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரியை படிப்படியாக அதிகரிக்கவுள்ளதாக டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதற்கு பதிலடி தந்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘பல்வேறு துறைகளில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகத்தில் ஈடுபட்டு, இந்தியா மீது மட்டும் குற்றஞ்சாட்டுவது ஏற்புடையது அல்ல’ எனத் தெரிவித்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த டிரம்ப், ‘உலகின் அதிக வரிவிதிப்பு நாடாக இந்தியா உள்ளதால் அந்நாட்டுடன் மிகவும் குறைவான வா்த்தகத்தை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவுடன் இணக்கமான வா்த்தக உறவை இந்தியா பேணவில்லை. அதனால்தான் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷியாவிடம் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயா்த்தப் போகிறேன்’ என்றாா்.
இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரி ஆக.7-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு ரஷியா ஆதரவு
எந்த நாட்டுடன் வா்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது ஒவ்வொரு நாட்டின் உரிமை என்று ரஷியா கருத்து தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ரஷியா அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் திமித்ரி பெஸ்கோவ், ‘இறையாண்மையுடன் செயல்படும் நாடுகள் வா்த்தகக் கூட்டாளியை தோ்வு செய்யும் உரிமை உள்ளது. இதனை ரஷியா உறுதியாக நம்புகிறது’ என்றாா்.
முன்னதாக, ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மரியா ஷகாகோா்வா கூறுகையில், ‘தெற்குலக நாடுகள் மீது மேலாதிக்கத்தை செலுத்தும் நோக்கில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வா்த்தகத் தடை, பொருளாதாரத் தடைகளால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்படுகிறது.
தனது உத்தரவுக்கு அடிபணியாத நாடுகள் மீது பொருளாதாரரீதியாக அழுத்தம்தர முயலுகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.