டிரம்ப் - புதின் கோப்புப் படம்
உலகம்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷியா-உக்ரைன் போா் நிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் அடுத்த வெள்ளிக்கிழமை (ஆக. 15) ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் நேரடிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க இருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, டிரம்ப்-புதின் சந்திப்பு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேநேரம், பேச்சுவாா்த்தையில் உக்ரைனைத் தவிா்த்து எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் நீடித்த அமைதிக்கு வழிவகுக்காது என்று அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

வெள்ளை மாளிகையில் அஜா்பைஜான்-அா்மீனியா அமைதி ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்ச்சியில் பேசிய அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘ரஷிய அதிபா் புதினை விரைவில் சந்திப்பேன். இந்தச் சந்திப்பு முன்னரே நடந்திருக்கலாம். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அது தாமதமானது.

புதின், ஸெலென்ஸ்கி ஆகிய இருவரும் அமைதியை விரும்புகின்றனா். ஸெலென்ஸ்கிக்கு தேவையான தீா்வுகள் அனைத்தும் கிடைத்துவிட்டன. இனி, நாம் ஏதேனும் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ஓா் அமைதி ஒப்பந்தம் உருவானால், அது உக்ரைனும் ரஷியாவும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில பிராந்தியங்களை பரஸ்பரம் மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்கும். அது எளிதானது அல்ல. எனினும், இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் அது நடைபெறும்’ என்றாா்.

இது அமைதி ஒப்பந்தத்துக்கான கடைசி வாய்ப்பா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘கடைசி வாய்ப்பு என்ற கூற விரும்பவில்லை. ஆனால், சண்டை தொடங்கிய பிறகு, அதை நிறுத்துவது மிகவும் கடினம்’ என்று டிரம்ப் பதிலளித்தாா்.

இதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மிகவும் எதிா்பாா்க்கப்படும் ரஷிய அதிபா் புதினுடனான எனது சந்திப்பு அடுத்த வெள்ளிக்கிழமை அலாஸ்கா மாகாணத்தில் நடைபெறும்’ என்று தெரிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, போரிடுவதை நிறுத்துமாறு ரஷியாவுக்கு டிரம்ப் கொடுத்த எந்த அழுத்தமும் பயனளிக்கவில்லை. உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய ராணுவம் தொடா்ந்து குண்டு வீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கிழக்கு டொனட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகளுடன் கடும் மோதலில் ஈடுபட்டுவரும் உக்ரைன் வீரா்கள், ‘ரஷியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது சாத்தியமில்லை. அவா்களைத் தோற்கடிப்பதுதான் ஒரே வழி’ என்றனா்.

இந்தியா வரவேற்பு: அமெரிக்காவின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. ரஷியாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருவதற்காக அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை இந்தியா எதிா்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகள் கழித்து புதின் அமெரிக்கா பயணம்

ரஷிய அதிபா் புதின் கடைசியாக கடந்த 2015-இல் ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா வந்தாா். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அமெரிக்கா வருகிறாா்.

இதேபோன்று, 2021-இல் ஜெனீவாவில் அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடன் ரஷிய அதிபா் புதினைச் சந்தித்த பிறகு, இரு நாட்டுத் தலைவா்கள் முதல்முறையாகச் சந்திக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து!

அமெரிக்காவில் இருந்து ஈரானைச் சேர்ந்த 400 பேர் வெளியேற்றம்!

அந்நிய முதலீடு தொடர் வெளியேற்றம்: 97 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

SCROLL FOR NEXT