ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் 4-ம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் காபுலில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் நிறைவடைந்து, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, அமெரிக்க படைகள் வெளியேறின. அன்று முதல், அந்நாட்டில் தலிபான்கள் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகின்றது.
இதையடுத்து, நிகழாண்டுடன் (2025) தலிபான்களின் ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக நாளை (ஆக.15) அந்நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், பாதுகாப்புத் துறையின் ஹெலிகாப்டர்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், அந்நகரத்தின் மீது வண்ணங்கள் நிறைந்த பூக்கள் தூவப்படும் என்றும், தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஹபீப் கொஃப்ரான் அறிவித்துள்ளார்.
இத்துடன், காபுல் நகரம் முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான தலிபான்களின் கொடிகள் இன்று (ஆக.14) பறக்கவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட பெண்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், நாளை நடைபெறும் கொண்டாட்டங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் தற்போது தங்களது தாயகத்துக்குத் திரும்பி வருகின்றனர்.
ஏற்கனவே, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசு, சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.