உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவின் அலஸ்காவில் டிரம்பை நேரில் சந்தித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் ஆனால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கும் டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக பேசவுள்ளார்.
இந்த சந்திப்பில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனிடையே, உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், நேட்டோவில் உக்ரைனால் இணைய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,
”உக்ரைன் அதிபர் நினைத்தால் ரஷியாவுடனான போரை உடனடியாக நிறுத்த முடியும். அல்லது தொடர்ந்து சண்டையிடலாம். எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒபாமாவால் 12 ஆண்டுகளுக்கு முன்னதாக எவ்வித சண்டையும் இல்லாமல் ரஷியாவுக்கு அளிக்கப்பட்ட கிரிமியா திருப்பி அளிக்கப்படாது. நேட்டோவிலும் உக்ரைனால் இணைய முடியாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப்பின் இந்த பதிவால், உக்ரைன் அதிபருடனான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷியா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கக் கூடும் எனத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, நேட்டோவில் இணைய முயற்சிகள் மேற்கொண்டார்.
நேட்டோவில் இணைந்தால் ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தெரிவித்த புதின், உக்ரைன் மீது போர் தொடுத்தார். மூன்று ஆண்டுகளைக் கடந்த போர் தொடர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.