ஈரான் அரசுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 அக்டோபரிலும், மெல்போர்ன் நகரத்தில் யூதக் கோயில் மீது கடந்த 2024 டிசம்பரிலும், தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களை, ஈரான் அரசுதான் இயக்கியுள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்களை ஆஸ்திரேலியாவின் புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுவதாகவும், அந்நாட்டிலுள்ள ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
இத்துடன், ஆஸ்திரேலியாவுக்கான ஈரானின் தூதர் அஹமது சதேகி வெளியேற்றப்படுவார் எனவும், அந்நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் அனைவரும் தாயகம் திரும்புமாறும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ஈரானில் வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்படலாம் எனவே உடனடியாக வெளியேறுங்கள் என எச்சரித்துள்ளார். மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படைகளை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க பிரதமர் அல்பானீஸ் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காஸாவில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையில் கடந்த 2023-ம் ஆண்டு போர் துவங்கியது முதல், ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் அரசின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்திருந்தார். இதற்கு, பிரதமர் அல்பானீஸ் பலவீனமானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.