கோப்புப்படம் Photo | AP
உலகம்

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானம்! மீண்டும் தேடும் மலேசியா!

11 ஆண்டுகளுக்கு முன் மாயமான எம்ஹெச்370 மலேசிய விமானத்தை தேடும் பணி பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகளாகும் நிலையில், மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கப்படவுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது.

சுமாா் 1,20,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட கடல்பகுதியில் அந்த விமான பாகங்களைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து, விமானங்களைக் கண்டறியும் பிரபல கப்பல் நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், விமான பாகங்கள் எவற்றையும் அது கண்டுபிடிக்கவில்லை.

பின்னர், அதிலிருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக மலேசிய அரசு அதிகாரபூா்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், எம்ஹெச்370 மலேசிய விமானத்தை தேடுவதற்கு அமெரிக்காவின் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் அந்நாட்டு அரசிடம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுமதி கோரியது.

இதையடுத்து, தேடுதல் வேட்டையில் மாயமான விமானப் பாகங்கள் கிடைத்தால் மட்டுமே மலேசிய அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாகவும், முயற்சி தோல்வியடைந்தால் தேடுதல் செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்ளவும் அந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் தேடுதல் வேட்டையை ஓஷன் நிறுவனம் தொடங்கிய நிலையில், மோசமான வானிலை காரணமாக ஏப்ரல் மாதம் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வருகின்ற டிச. 30 ஆம் தேதிமுதல் எம்ஹெச்370 மலேசிய விமானத்தை தேடும் பணியை மீண்டும் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தொடங்கவுள்ளது.

விமான பாகங்களை ஓஷன் நிறுவனம் கண்டுபிடிக்கும் பட்சத்தில், 7 கோடி அமெரிக்க டாலர்களை மலேசிய அரசு வழங்கும்.

2014 முதல் தேடுதல் வேட்டை

விமானம் ரேடாரில் இருந்து மாயமானதற்கு மறுநாளான மார்ச் 9 ஆம் தேதியே, ராயல் மலேசிய விமானப் படை முதல்முறையாக தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. அந்தமான் கடல் பகுதியில் விமானம் மாயமானதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதாக மலேசியா அறிவித்தது.

பல கட்டங்களாக தேடுதல் வேட்டை தொடர்ந்த போதிலும், விமானத்தின் எந்த பாகமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜூலை 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக பிரான்ஸ் தீவு ஒன்றில் விமானத்தின் வலது இறக்கையில் இருந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அந்த விமானத்தில் இருந்ததை போன்ற சூட்கேஸ் ஒன்று, சேதமடைந்த நிலையில், ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, சீன தண்ணீர் பாட்டில், இந்தோனேசிய துப்புறவு சாதனம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இவை அனைத்தும் பயணிகளுடன் சம்மந்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

பன்னாட்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் சீனா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து, வியட்நாம், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமானங்கள் இணைந்து செயல்பட்டன.

விமானத்துக்கு என்ன நடந்தது?, காணாமல் போனதற்கான காரணம் என்ன?, பயணிகளின் குடும்பத்தினருக்கு உண்மை தெரிவிப்பதற்காகவும் மீண்டும் தேடுதல் பணியை மலேசியா மேற்கொண்டுள்ளது.

மொத்தம் 55 நாள்கள் நடைபெறும் இந்த தேடுதல் பணிகள், தென்கிழக்கு ஆசியா, அந்தமான் கடல் முதல் தெற்கு இந்தியப் பெருங்கடல் வரை நடைபெறவுள்ளன.

Malaysia is searching again for the plane that disappeared 11 years ago!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 5 ஆண்டுகளில் உலகப் போர்? எலான் மஸ்க் எச்சரிக்கை!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை! காவல் அதிகாரி ஒருவர் பலி!

"பிகார் மக்கள் தமிழக அரசியலை நிர்ணயிக்க முடியாது!" மன்சூர் அலிகான் உண்ணாவிரதப் போராட்டம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஓ.. சுகுமாரி!

தீபத்திருவிழா: தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும்!

SCROLL FOR NEXT