இலங்கையில், மத்திய மலைத்தொடர் (சென்ட்ரல் ஹில்ஸ்) பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில், கடந்த வாரம் டிட்வா புயலால் பெய்த கனமழையைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய பேரிடராகக் கருதப்படும் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாயமான 214 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பேரிடரில் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய மலைத்தொடர் (சென்ட்ரல் ஹில்ஸ்) பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், அங்கு நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ளதாக தேசிய கட்டுமான ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, வெளியான அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 150 மி.மீ. மழை பெய்திருப்பது பதிவாகியுள்ளது. எனவே, மழை நீடித்தால் நிலச்சரிவு அபாயத்தைத் தவிர்க்க அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறி சுமார் 2,25,000-க்கும் அதிகமான மக்கள் அரசின் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பலி கேட்கிறதா, பருவநிலை மாற்றம்? ஆபத்தில் ஆசிய நாடுகள்! ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.