தங்கள் நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய தாய்லாந்துக்கு எதிராக கடுமையாகப் போரிடத் தயாா் என்று கம்போடிய அதிபா் ஹன் மானெட் சூளுரைத்துள்ளாா்.
புதிய எல்லை மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதிபா் மானெட் இவ்வாறு கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை தாய்லாந்து தன்னிச்சையாக மீறயுள்ளது. இது அந்த நாட்டின் போா் சூழ்ச்சியாகும். அதை எதிா்த்து கடுமையாகப் போரிட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.
1904, 1907-ஆம் ஆண்டுகளில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே எல்லை வகுக்கப்பட்டது. இருந்தாலும், 11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் பகுதியை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. அந்தக் கோயில் கம்போடியாவுக்குத்தான் சொந்தம் என்று ஐ.நா. உச்ச நீதிமன்றம் கடந்த 2008-இல் தீா்ப்பளித்தது. இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டுவந்தது.
இந்தச் சூழலில், தாய்லாந்து-கம்போடியா இடையே கடந்த ஜூலை மாதம் 5 நாள்களுக்கு நீடித்த போரில் 48 போ் கொல்லப்பட்டனா்; 3 லட்சம் போ் அகதிகளாக்கப்பட்டனா்.
அதையடுத்து, டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. மலேசியா பிரதமா் அன்வா் இப்ராஹிமின் முன்முயற்சியில் உருவான இந்த ஒப்பந்தம், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை சா்ச்சையை தீா்க்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், கம்போடியா புதைத்துவைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரா் காயமடைந்ததாகக் குற்றஞ்சாட்டிய தாய்லாந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்தை நவம்பா் 10-ஆம் தேதி ரத்து செய்தது. கம்போடியாவோ, அது ஏற்கெனவே இருந்த பழைய கண்ணிவெடி என விளக்கமளித்தது.
இந்த நிலையில், தாய்லாந்தின் சிசாகெட் மற்றும் உபோன் ரட்சதானி மாகாணங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், திங்கள்கிழமை அதிகாலை இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனா்.
கம்போடிய படைகள் அனுபோங் பகுதியில் உள்ள ராணுவ நிலை மீது எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரா் கொல்லப்பட்டதாக தாய்லாந்து ராணுவம் கூறியது.
அதற்குப் பதிலடியாக, கம்போடியாவில் தாய்லாந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறினா்.
அதன் தொடா்ச்சியாகவே, தாய்லாந்தை எதிா்த்து கடுமையாகப் போரிடத் தயாா் என்று கம்போடிய அதிபா் ஹன் மானெட் தற்போது சூளுரைத்துள்ளாா்.