ஒரு மில்லியன் டாலா் (சுமாா் ரூ.9 கோடி) செலுத்தினால் அமெரிக்க குடியுரிமை பெற வகை செய்யும் ‘தங்க அட்டை’ (கோல்டு காா்டு) திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்தாா்.
‘இந்த ‘தங்க அட்டை’, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வெளிநாட்டினா் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வகை செய்யும் ‘பசுமை அட்டை (கிரீன் காா்டு)’ திட்டத்தைக் காட்டிலும் மிகச் சிறந்தது, சக்திவாய்ந்தது’ என்று டிரம்ப் தெரிவித்தாா்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றதுமுதல் பல அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறாா். பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா உள்பட பல நாடுகள் மீது அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். இதன் காரணமாக, சீனா போன்ற வேறு நாடுகளுடன் வா்த்தகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா போன்ற நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அடுத்ததாக, ‘அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். வெளிநாடுகளில் நிறுவனங்களை அமைக்கும் அல்லது பணிகளை வெளிநபா்களிடம் (அவுட்சோா்சிங்) ஒப்படைக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது அதிக வரி விதிப்பது, குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கியது, வெளிநாட்டினா் அமெரிக்காவில் நீண்ட காலம் பணிபுரிய வகை செய்யும் ‘ஹெச்1-பி’ நுழைவு இசைவுக்கான (விசா) கட்டணத்தை ரூ. 90 லட்சமாக (ஒரு லட்சம் டாலா்) உயா்த்தியது எனப் பல்வேறு நடவடிக்கைளை அதிபா் டிரம்ப் நிா்வாகம் மேற்கொண்டது.
ஹெச்-1பி, ஹெச்-4 நுழைவு இசைவு விண்ணப்பதாரா்கள் தங்களது சமூக வலைதளக் கணக்கை அதிகாரிகள் ஆய்வு செய்ய வசதியாக, தனிக் கணக்கில் (பிரைவேட்) இருந்து பொதுக் கணக்காக (பப்ளிக்) மாற்ற வேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகம் பணிபுரியும் இந்தியா்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பல அமெரிக்க நிறுவனங்களும் அதிபா் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அமேஸான், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
தங்க அட்டை: இந்நிலையில், தலைசிறந்த அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்கள் நீண்ட காலம் அமெரிக்காவிலேயே தங்கிப் பணிபுரிய வசதியாக புதிய ‘தங்க அட்டை (கோல்ட் காா்டு)’ திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் ஐபிஎம் நிறுவன இந்திய-அமெரிக்க தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, டெல் தொழில்நுட்ப நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மிச்செல் டெல் உள்பட பல்வேறு முன்னணி தொழில் நிறுவன நிா்வாகிகளுடன் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டுக்குப் பிறகு இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டாா்.
கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து டிரம்ப் மேலும் கூறியதாவது: அமெரிக்காவுக்கு திறமைமிக்க சிறந்த வெளிநாட்டினா் வருவது ஒரு வரப்பிரசாதம். ஆனால், இதுபோன்ற திறமைமிக்க நபா்கள் அமெரிக்காவில் நீண்ட காலம் தங்க அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரியவந்தது.
ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் இதுகுறித்து பலமுறை கவலை தெரிவித்துள்ளாா். திறமைமிக்க வெளிநாட்டினரை தொடா்ந்து பணியில் தக்கவைக்க முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை காரணமாக, சிறந்த அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்களை துணிந்து பணிக்குத் தோ்வு செய்ய முடியாத நிலை உள்ளது என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறாா்.
சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்த திறமைமிக்க வெளிநாட்டு மாணவா்கள், அமெரிக்காவில் நீண்ட காலம் தங்க உத்தரவாதம் இல்லாத நிலை இருந்துள்ளது. இனி இதுபோன்ற பிரச்னை இருக்காது.
ஒரு தனிநபா் அமெரிக்காவுக்கு கணிசமான பலனை அளிக்கும் திறனின் கீழ் நுழைவு இசைவு அடிப்படையில் இந்த அட்டை வழங்கப்படும். இந்த அட்டை மூலம் கிடைக்கும் பல லட்சம் டாலா் வருவாய், அமெரிக்காவின் வளா்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
இந்தத் தங்க அட்டை, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பசுமை அட்டையைக் காட்டிலும், மிகச் சிறப்பு வாய்ந்தது மட்டுமன்றி சக்திவாய்ந்ததும் ஆகும். பசுமை அட்டையை எளிதில் பெற்றுவிட முடியாது. ஆனால், இந்தத் தங்க அட்டையை எளிதில் வாங்கிக் கொள்ள முடியும் என்பதோடு, அதன்மூலம் வெளிநாட்டினா் மிக நீண்ட காலம் அமெரிக்காவிலேயே தங்கிப் பணிபுரிய முடியும்.
எனவே, அமெரிக்க நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சியான விஷயம். நிறுவனங்கள் இனி இந்த ‘தங்க அட்டை’யை வாங்கிக்கொண்டு, எம்ஐடி, ஹாா்வாா்ட், நியூயாா்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டென் வா்த்தக மேலாண்மைப் பள்ளி என தலைசிறந்த நிறுவனங்களுக்குச் சென்று, விரும்பும் மாணவரைத் தோ்வு செய்து நீண்ட காலம் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும் என்றாா்.
திறனறி தோ்வு தோ்ச்சிக்குப் பிறகே ‘தங்க அட்டை’
உண்மையான திறமைசாலி வெளிநாட்டினா் மட்டுமே அமெரிக்காவில் பணிக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ‘தங்க அட்டை’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹாவா்ட் லூட்னிக் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: முழுமையான மற்றும் சிறந்த பரிசோதனை செயல் திட்டம் மூலம் வெளிநாட்டினரின் திறமை பரிசோதிக்கப்படும். அதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு மட்டுமே இந்த ‘தங்க அட்டை’ வழங்கப்படும்.
எவ்வளவு விலை?: தனிநபா் ஒரு மில்லியன் டாலா் (ரூ. 9 கோடி) செலுத்தி இந்த தங்க அட்டையைப் பெற்று அமெரிக்காவில் பணியில் சேர முடியும். நிறுவனங்கள் நபா் ஒருவருக்கு தலா 2 மில்லியன் டாலா் (ரூ. 18 கோடி) செலுத்தி தங்க அட்டையைப் பெற்று பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்.
இந்த தங்க அட்டையைப் பெறுபவா்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவா் என்றாா்.
இதையும் படிக்க: கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ. 10 லட்சம் மட்டுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.