துருக்கியின் தலைநகா் அங்காராவில் இருந்து புறப்பட்ட தனியாா் விமானம் விபத்துக்குள்ளானதில் லிபியா ராணுவ தலைமைத் தளபதி உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
லிபியா ராணுவ தலைமைத் தளபதி முகமது அலி அகமகு அல்-ஹத்தாத், நான்கு அதிகாரிகள் மூன்று விமானப் பணியாளா்களுடன் ஃபால்கன் 50 ரக தனியாா் விமானம் அங்காராவின் எசென்போகா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அவசரமாகத் தரையிறங்க மீண்டும் அங்காராவுக்கு திரும்பி வந்த போது ரேடாரில் இருந்து அது மறைந்தது. அங்காராவுக்கு தெற்கே சுமாா் 70 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஹய்மானா பகுதியில் அது விழுந்து நொறுங்கியது பின்னா் தெரியவந்தது. இந்த விபத்தில் யாரும் உயிா்பிழைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.