இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதில் தனது நிர்வாகம் முக்கிய பங்குவகித்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உரிமைக் கோரியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, புளோரிடாவில் உள்ள வரலாற்று சிறப்புடைய மார்-எ-லாகோ மாளிகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் இடையே திங்களன்று (டிச. 29) முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்தச் சந்திப்பில், தனது இரண்டாவது பதவி காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் 8 போர்களை நிறுத்தியுள்ளதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அதற்குத் தனக்கு குறைந்த அளவிலான அங்கீகாரம் மட்டுமே கிடைத்ததாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசுகையில், அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் இடையிலான போரை அவர்கள் நிறுத்தவில்லை என்றால் இருநாடுகள் மீதும் வர்த்தக தடை விதிக்கப்பட்டு 200 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தோம் எனவும் மறுநாளே இருதரப்பும் 35 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போரை நிறுத்த ஒப்புக்கொண்டன எனவும் தெரிவித்துள்ளார்.
இத்துடன், “தெற்காசிய நாடுகளின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்பட 8 போர்களை நிறுத்தியுள்ளேன்” என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், 70-க்கும் அதிகமான முறை இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக, அதிபர் டிரம்ப் உரிமைக் கோரியுள்ளார்.
ஏற்கெனவே, பாகிஸ்தான் உடனான மோதலைக் கைவிட்டதற்கு இடையில் மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல் பெண் பிரதமர்... 17 ஆண்டு சிறை.. கொல்லப்பட்ட பிரதமர் மனைவி.. யார் இந்த கலீதா ஜியா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.