பனாமா ஹோட்டல்  AFP
உலகம்

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.

அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பல்வேறு வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களை டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நாடு கடத்தி வருகின்றது.

கடந்த இரண்டு வாரங்களில் மூன்று அமெரிக்க ராணுவத்தின் விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்ட 332 இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அனைவரின் கை மற்றும் கால்களை விலங்கால் கட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பனாமாவில் இந்தியர்கள் அடைப்பு

நேரடியாக அமெரிக்காவில் இருந்து அதிகளவிலான மக்களை நாடு கடத்துவதில் சிக்கல் இருப்பதால் பனாமா நாட்டு வழியாக சிலரை நாடு கடத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக இரு நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீன நாடுகளைச் சேர்ந்த 300 பேரை கொலம்பியா மாகாணம் வழியாக பனாமாவுக்கு அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளது.

அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் 300 பேரை துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த ஹோட்டலின் கண்ணாடி ஜன்னல் வழியாக, ’எங்களை காப்பாற்றுங்கள், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற சொற்கள் அடங்கிய காகிதத்தை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பனாமா அரசு,

”நாடு கடத்தப்படுபவர்களின் சுதந்திரத்தை பறிக்கவில்லை, அவர்களின் பாதுகாப்புக்காகதான் போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்களை வெளியே அனுப்ப இயலாது.

300 பேரில் 171 பேர் சொந்த நாடுகளுக்கு திரும்ப ஒப்புக் கொண்டனர். அவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மீதமுள்ள 40 சதவிகிதம் பேர் சொந்த நாடுகளுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். வேறு நாடுகளுக்கு செல்ல கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அதனை சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்பது கடினம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தின்படி, பனாமாவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் உணவு மற்றும் மருத்துவச் செலவுகளை அமெரிக்க அரசு ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா விளக்கம்

அமெரிக்காவில் இருந்து வந்த இந்தியர்கள் பனாமாவில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தகவலை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

அனைத்து அடிப்படை வசதிகளுடனும் அவர்கள் அனைவரும் நலனுடன், பாதுகாப்பாக இருப்பதாக தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT