கோல்டு-பிளே நிகழ்ச்சியின் கிஸ்-கேமில் சிக்கிய அமெரிக்க நிறுவனத்தின் மனிதவள அதிகாரியும் ராஜிநாமா செய்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் ‘கிஸ் கேம்’ என்றழைக்கப்படும் கேமரா வைக்கப்படுவது வழக்கமானது. இதன் மூலம் போட்டியின் போது நெருக்கமாக இருக்கும் ஜோடிகளை, இந்த கேமராவில் படம்பிடித்து பெரிய திரையில் காட்டுவார்கள்.
அதைப் பார்க்கும் அரங்கில் கூடியிருக்கும் பார்வையாளர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்துவர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மாசாஸுசெட் மாகாணத்தில் பாஸ்டனுக்கு அருகில் ஜூலை 16 ஆம் தேதி நடைபெற்ற கோல்டுபிளே நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆஸ்ட்ரோனமரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆன்டி பைரன், மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் நெருக்கமாக இருந்த விடியோ, அரங்கில் கூடியிருந்தவர் முன்னிலையில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.
இந்தச் சர்ச்சை பூதாகரமாக வெடித்த நிலையில், ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி பைரன் மற்றும் மனிதவள அதிகாரிக்கு இடையேயான தவறான நட்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால், நிறுவனத்தின் பெயரும் பிரபலமடைந்தது.
பசியில் கிடந்த இணையதளவாசிகளுக்கு விருந்து வைக்கும் விதமாக வெளியான இந்தத் தகவலால் சமூக வலைதளங்களில் பலரும் மீம்ஸ்களை வெளியிட்டு கிண்டலடித்தனர். இதனால், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ஆன்டி பைரன், பின்னர், தனது பதவியை ஜூலை 19 ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.
நிர்வாகத்தின் தலைமை அவரது ராஜிநாமாவை முறையாக ஏற்றுக்கொண்டது. மேலும், இணை நிறுவனர் பீட் டிஜாய் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மனித வள அதிகாரியான கிறிஸ்டின் கபோட்டும், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அதன் இணையதளப் பக்கத்தில் இருந்து கிறிஸ்டின் கபோட்டின் பெயரை நீக்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “எங்களது நிறுவனத்தின் பெயருக்கு ஒரே இரவில் களங்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், எங்கள் வாடிக்கையாளருக்குத் தேவையானவற்றை சிறப்பாக செய்து வருகிறோம்” என கூறி இழந்த நன்மதிப்பை பெறும் முயற்சியில் ஆஸ்ட்ரோனமர் நிறுவனம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : 4,078 நாள்கள் பிரதமராக..! நீண்ட நாள் பதவி வகித்த இந்திரா காந்தி சாதனையை முறியடித்த மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.