ஈரானில் தாக்குதல் படம்|AP
உலகம்

ஈரானில் அணுசக்தி தளவாடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: வான்வெளி 3-ஆவது நாளாக மூடல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

DIN

ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமையில் (ஜூன் 13) தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும்(ஜூன் 15 - ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேல் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேல் வான்வெளிyஆனது பாதுகாப்பு காரணங்களுக்காக சிவில் விமானப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் வான்வெளியில் எந்தவொரு விமானங்களும் இயக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான தீவிர சண்டையில், ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய மையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் இஸ்ஃபாஹான் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: “ஈரானின் இஸ்ஃபாஹான் பகுதியிலுள்ளதொரு அணுசக்தி தளவாடத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ஃபாஹானில் அமைந்துள்ள அணுசக்தி மையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 4 முக்கிய வளாகங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றில் ’யுரேனியம் மாற்றும் மையமும்’ சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் வெளியே கதிர்வீச்சு பரவும் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த தீவிர சண்டையில் இஸ்ரேல் தாக்குதல்களில், ஈரானில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மோதலில், ஈரானில் 78 பேர் பலியானதுடன், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இஸ்ரேலில் 3 பேர் பலியானதுடன், 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல்-ஈரான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் இருநாடுகளிலும் வசிக்கும் இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

SCROLL FOR NEXT