ஈரானின் அரசு தொலைக்காட்சி நிலையத்தின் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதால், இரு நாடுகளும் மாறிமாறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெஹ்ரானில் உள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு தொலைக்காட்சி (ஐஆர்ஐபி) மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேரலை ஒளிபரப்பில் செய்தி வாசிப்பாளர் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போது நடத்தப்பட்ட தாக்குதலால், கட்டடம் குலுங்கி கரும்புகை எழுந்த நிலையில், செய்தி வாசிப்பாளர் அலறியடித்து ஓடியுள்ளார்.
இந்த தாக்குதலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார்.
“ஈரான் ஆட்சிக்கு பிரசாரமாக இருக்கும் அரசின் தொலைக்காட்சியை, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய பிறகு தாக்கினோம். ஈரானிய சர்வாதிகாரத்தை அனைத்து இடங்களிலும் தோற்கடிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் மண்ணில் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.