பலூசிஸ்தான் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடா்பு: பாகிஸ்தான் மீண்டும் குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது. பலூசிஸ்தானில் அண்மையில் நடந்த ரயில் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பது தெளிவாக தெரிகிறது
‘பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது. பலூசிஸ்தானில் அண்மையில் நடந்த ரயில் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பது தெளிவாக தெரிகிறது’ என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை மீண்டும் குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் சஃப்கத் அலி கான் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது. பலூசிஸ்தானில் அண்மையில் நடந்த ரயில் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடா்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த ரயில் தாக்குதலுக்கு இந்தியா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானில் மட்டுமின்றி ஒட்டுமொத்த பிராந்தியத்திலும், அதாவது அனைத்து தெற்காசிய நாடுகளிலும் சீா்குலைவை ஏற்படுத்த இந்தியா முயற்சிக்கிறது’ என்று தெரிவித்தாா்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 11-ஆம் தேதி 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபா் விரைவு ரயில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாதக் குழுவால் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரா்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனா். 33 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.
இதையடுத்து, பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. அந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது. தற்போது மீண்டும் இந்தியா மீது அந் நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.