இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே பாகிஸ்தான் தோற்றுவிட்டது: வாகர் யூனிஸ்
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸிலேயே தோற்றுவிட்டதாக வாகர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸிலேயே தோற்றுவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாகர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கையில் பிரமதாசா திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
வாகர் யூனிஸ் அதிருப்தி!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸ் முடிந்த உடனயே தோற்றுவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாகர் யூனிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸிலேயே தோற்றுவிட்டது. இந்திய அணி 175 ரன்கள் குவித்தவுடன், ஆட்டம் பாகிஸ்தான் கைகளைவிட்டு நழுவி விட்டது. பந்தில் அதிகம் சுழல் இருந்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சு தெரிவுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார்.
சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தை இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்டம் முதல் இன்னிங்ஸ் முடிந்த உடனேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஏனெனில், இந்திய அணி மிகவும் அதிக ரன்கள் குவித்துவிட்டது.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லை என்பது எப்போதும் நமக்குத் தெரியும். இந்திய அணி 140 அல்லது 150 ரன்கள் குவித்திருந்தால், ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். புதிய பந்தில் ஹார்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் அணிக்கு சவாலளித்தார்கள். அதன் பின், பாகிஸ்தான் வீரர்களால் இலக்கை எட்டி பிடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
உஸ்மான் தாரிக் மிகவும் அற்புதமாக பந்து வீசினார். அவர் வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். அவரைப் பற்றி கடந்த சில வாரங்களாக நாம் பேசி வருகிறோம். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவரை முன்கூட்டியே பந்துவீச்சில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர் பந்துவீச வரும்போது, இஷான் கிஷன் அதிரடியாக ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு ஏற்கனவே சேதாரத்தை ஏற்படுத்திவிட்டார். அந்த இடத்தில்தான் பாகிஸ்தான் போட்டியில் தோற்றது என்றார்.
Waqar Younis has said that Pakistan lost the T20 World Cup match against India in the first innings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.