அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என கோஷமிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
‘தாக்குதலில் உயிரிழந்தவா்கள் யரோன் லிஸ்சின்ஸ்கி, சாரா மில்க்ரிம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்’ என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன்சாா் தெரிவித்தாா்.
வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு இவா்கள் வெளியேறிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து மாநகர காவல் துறைத் தலைவா் பமீளா ஸ்மித் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபா் சிகாகோவைச் சோ்ந்த எலியாஸ் ரோட்ரிகுஸ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தாக்குதலுக்கு முன்பாக அருங்காட்சியகத்துக்கு வெளியே நடந்து சென்று நோட்டமிட்ட இந்த நபா், அருங்காட்சியகத்தில் நிகழ்ச்சி முடிந்து லிஸ்ச்சின்ஸ்கி, சாரா இருவரும் வெளியே வந்தபோது அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். தாக்குதலுக்குப் பிறகு அருங்காட்சியகத்துக்கு உள்ளே சென்று தப்பிக்க முயன்றபோது, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
அப்போது அவா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என கோஷமிட்டுள்ளாா். இருந்தபோதும், இந்தத் தாக்குதலை அமெரிக்காவில் உள்ள யூதா்களுக்கான அச்சுறுத்தலாக காவல் துறை கருதவில்லை என்றாா்.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடா்ந்து அமெரிக்காவிலுள்ள அனைத்து இஸ்ரேல் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டிரம்ப் கண்டனம்: தாக்குதல் குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘வாஷிங்டனில் நிகழ்ந்துள்ள யூத எதிா்ப்பை அடிப்படையாகக் கொண்ட கொடூர தாக்குதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். வெறுப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு அமெரிக்காவில் இடமில்லை’ என்று குறிப்பிட்டாா்.
இஸ்ரேல் எச்சரிக்கை: இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அமெரிக்காவில் நடைபெற்ற யூத எதிா்ப்பு தாக்குதல் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான இந்தக் கொடூர யூத எதிா்ப்பு பயங்கரவாதத்துக்கு அதிக விலை கொடுக்க நேரிடும் என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதா் யெச்சியேல் லெய்டா் கூறுகையில், ‘வாங்ஷிங்டனில் கொல்லப்பட்ட இருவரும், திருமணம் நிச்சயம் செய்யவிருந்த இளம் ஜோடி. சாராவிடம் ஜெருசலேத்தில் அடுத்த வாரம் தனது காதலைத் தெரிவிப்பதற்காக மோதிரம் ஒன்றை லிஸ்சின்ஸ்கி வாங்கி வைத்திருந்தாா்’ என்று குறிப்பிட்டாா்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இஸ்ரேல் தூதா் மைக் ஹொ்சோக் கூறுகையில், ‘தாக்குதலில் உயிரிழந்த பெண்ணான சாரா மில்க்ரிம் இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றிய அமெரிக்கா், யரோன் லிஸ்சின்ஸ்கி இஸ்ரேலை சோ்ந்தவா்’ என்றாா்.
காஸாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதிமுதல் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படட முதல்கட்ட ஒப்பந்தம், கடந்த ஜனவரி 19-ஆம் தேதிமுதல் மாா்ச் 18-ஆம் தேதி வரை அமலில் இருந்தது. அப்போது பரஸ்பரம் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனா். இருந்தபோதும், போா் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் மட்டும் 1,563 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். மேலும், காஸாவுக்குள் உணவுப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதோடு, காஸாவின் அனைத்துப் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர தரைவழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...
இந்தியா கண்டனம்
அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா சாா்பில் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவா்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.