இஸ்ரேலில் இருந்து மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் காஸா அதிகாரிகளிடம் இன்று (நவ. 8) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்.10 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் ஒப்படைக்கும் ஒவ்வொரு இஸ்ரேலியரின் உடலுக்கு நிகராக 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்து வருகின்றது.
இந்த நிலையில், தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் உடலை ஹமாஸ் படைகள், நேற்று இரவு ஒப்படைத்தனர். இதையடுத்து, ஹமாஸ் ஒப்படைத்தது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்.7 ஆம் தேதி கொல்லப்பட்ட இஸ்ரேலியர் லியோர் ருடேஃப் என்பவருடையது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொல்லப்பட்ட 15 பாலஸ்தீனர்களின் உடல்கள், காஸாவில் கான் யூனிஸ் பகுதியிலுள்ள நாசர் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.
இதன்மூலம், இஸ்ரேலில் இருந்து ஒப்படைக்கப்பட்ட பாலஸ்தீனர் உடல்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஹமாஸ் ஒப்படைத்த இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உடல்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
இத்துடன், இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸாவில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் பரிசோதனை கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால், இஸ்ரேல் ஒப்படைத்துள்ள உடல்களை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போதுமான டிஎன்ஏ பரிசோதனை கருவிகள் இன்றி இதுவரை 84 பாலஸ்தீனர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக, காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! இருளில் மூழ்கிய நகரங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.