டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டென்மார்க் வரலாற்றிலேயே இளம் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மெட் ஃபிரடெரிக்சன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குழந்தைகள் அதிகம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா கொண்டுவரப்பட்டது. இதனை பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரித்ததால், அந்நாட்டில் சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
குழந்தைகளின் நேரம், குழந்தைப் பருவம் மற்றும் நல்வாழ்வைத் திருடும் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் என்றும் இதற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அந்நாட்டு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நடப்பாண்டு பிப்ரவரியில் டென்மார்க்கில் எடுக்கப்பட்ட பகுப்பாய்வு முடிவுகளின்படி, அந்நாட்டில் உள்ள இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 மணி நேரம் 40 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் செலவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | விபத்து எதிரொலி: எம்டி-11 ரக விமானங்களின் பயன்பாடு நிறுத்தம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.