ஓபன் ஏஐ நிறுவனத்தின் செய்யறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி, அதன் பயனர்களைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அமெரிக்காவில் ஏழு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி செய்யறிவு தொழில்நுட்பத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கேள்வி - பதில் முறையில் பயனர்களின் கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கும். இதில், புகைப்படங்களை உருவாக்கும் வசதியும் உள்ளது.
பயனர்களும் பெறும் வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்த வெர்சன்களை ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. சமீபத்தில் சாட்ஜிபிடி 4ஓ வெர்சன் வெளியானது.
இந்த நிலையில், கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் சாட்ஜிபிடி செய்யறிவு, தற்கொலைக்குத் தூண்டுவதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டு, 7 வழக்குகள் ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுவோருக்கான நீதி மையத்தின் வாயிலாக ஒரு பதின்ம வயது இளைஞர் உள்பட 7 பேர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ மாகாண நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
“ஓபன் ஏஐ நிறுவனம் தனது சாட்ஜிபிடி 4ஓ வெர்சனை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் அறிமுகம் செய்துள்ளது. இது மனரீதியில் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்தும் என்று ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்களே எச்சரிக்கை விடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
17 வயது அமெளரி லேசி என்பவர் சாட்ஜிபிடியின் உதவியை நாடியபோது, தற்கொலை செய்துகொள்ள கயிற்றை எப்படி சுருக்குப் போட வேண்டும், தூக்குப் போட்ட பிறகு எவ்வளவு நேரம் மூச்சு இருக்கும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.
அமெளரியின் மரணம் ஒரு விபத்தோ அல்லது தற்செயலாக நடந்ததோ அல்ல, மாறாக ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி சாமுவேல் ஆல்ட்மேன் ஆகியோர் முறையான பாதுகாப்புச் சோதனைகள் செய்யாமல் சாட்ஜிபிடி-யை அவசரமாக சந்தைப்படுத்தியதன் விளைவாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த 48 வயது ஆலன் ப்ரூக்ஸ் என்பவர் தாக்கல் செய்த மற்றொரு மனுவில்,
“இரண்டு ஆண்டுகளாக சாட்ஜிபிடி செய்யறிவைப் பயன்படுத்தி வருகிறேன். நாளடைவில் எவ்வித எச்சரிக்கையும் இன்றி, எனது பலவீனங்களை இரையாக்கி, ஏமாற்றி, மாயையை அனுபவிக்கத் தூண்டியது. இதன்விளைவாக, முன்பு எந்த மனநல நோயும் இல்லாத நான், தற்போது மனநல பாதிப்புக்குள்ளாகி, பேரழிவுகளை ஏற்படுத்தும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுவோருக்கான நீதி மையத்தின் வழக்கறிஞர் மேத்யூ பி. பெர்க்மேன் தெரிவித்திருப்பதாவது:
”இந்த வழக்குகள், பயனர் ஈடுபாடு மற்றும் சந்தைப் பங்கை அதிகரிப்பதன் பெயரில் கருவிக்கும் மனிதருக்கும் இடையிலான கோட்டை மங்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்புக்கான பொறுப்புக்கூறல் பற்றியது.
வயது, பாலினம் அல்லது பயனர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அவர்களை உணர்ச்சி ரீதியாக சிக்க வைக்கும் வகையில் GPT-4ஓ வெர்சனை வடிவமைத்து, அவர்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை இன்றி ஓபன் ஏஐ வெளியிட்டுள்ளது.
சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் போதுமான பாதுகாப்புகள் இல்லாமல் அதன் தயாரிப்பை சந்தைக்கு விரைவுபடுத்துவதன் மூலம், ஓபன் ஏஐ பாதுகாப்பை சமரசம் செய்து, நெறிமுறை வடிவமைப்பைவிட உணர்ச்சிப்பூர்வமாக கையாளுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஏழு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.