ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி அமெரிக்க ட்ரோன்கள் பறந்து வருவதாக, தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அருகிலுள்ள நாடு ஒன்றின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் நுழைந்து அனுமதியின்றி பறந்து வருவதாக, தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், ஆப்கானிஸ்தான் வானில் அமெரிக்க ட்ரோன்கள் பறப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனக் கூறியதுடன், அமெரிக்கா ஆப்கன் வான்வழியை அத்துமீறி பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், எந்த நாட்டின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் வருகின்றன என்பது குறித்து அவர் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை. ஆனால், ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் வானில் அமெரிக்க விமானம் அனுமதியின்றி பறப்பதற்கு பாகிஸ்தான் உதவியதாக, தலிபான் அரசு குற்றம்சாட்டியிருந்தது.
இத்துடன், ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க படைகள் மீண்டும் வருவதற்கு தலிபான் அரசு அனுமதிக்காது என்றும், அங்கு எந்தவொரு நாட்டின் ராணுவத் தளங்களும் அமைக்க அனுமதி இல்லை எனவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறின. பின்னர், உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், சர்வதேச அங்கீகாரத்தை தலிபான் அரசு கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷியாவின் முக்கிய எண்ணெய் மையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.