உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள தொ்னோபில் நகரில் ரஷியா புதன்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொ்னோபில் நகரில் ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். அவா்களில் 3 போ் சிறுவா்கள். இது தவிர, இந்தத் தாக்குதலில் 15 சிறுவா்கள் உள்பட 75 போ் காயமடைந்தனா்.
ரஷிய தாக்குதல் காரணமாக ஒரு குடியிருப்புக் கட்டடத்தின் மேற்பகுதி முழுவதும் தகா்க்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிகா கூறுகையில், ‘ரஷியாவின் அமைதித் திட்டங்கள் இப்படித்தான் இருக்கின்றன. இந்தக் கொடூரமான படுகொலைகள் குறித்து வியாழக்கிழமை நடக்கவிருக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முறையிடுவோம்’ என்றாா்.”
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், போரை நிறுத்துவதற்காக ரஷியாவுக்கு சா்வதேச நாடுகள் அளிக்கும் அழுத்தம் போதுமானதாக இல்லை என்பதையே உக்ரைனில் சாதாரண பொதுமக்கள் மீது அந்த நாடு ஒவ்வொரு நாளும் நடத்தும் கொடூரத் தாக்குதல்கள் காட்டுகின்றன என்றாா்.
தொ்னோபில் நகரம் மட்டுமின்றி, உக்ரைன் முழுவதும் ரஷியா 476-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது. இதில் கிழக்கு காா்கிவ் பகுதியைச் சோ்ந்த 46 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குளிா்காலம் நெருங்கி வரும் நிலையில், உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில் ரஷியா இந்தத் தாக்குதல்களை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, உக்ரைன் மீது 430 ட்ரோன்கள், 18 ஏவுகணைகளை ஏவி ரஷியா கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் தலைநகா் கீவில் ஆறு பேரும், தெற்கு நகரமான சோா்னோமோா்ஸ்கில் இருவரும் உயிரிழந்ததது நினைவுகூரத்தக்கது.
அபோது ரஷியா வீசிய இஸ்காண்டா் ரக ஏவுகணையின் சிதறல்களால் கீவ் நகரிலுள்ள அஜா்பைஜான் தூதரகம் சேதமடைந்தது.
ரஷியாவுக்குள் உக்ரைன் நடத்திவரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, அந்த நாட்டின் மின் உற்பத்தி மையங்கள் ஆயுத உற்பத்தி ஆலைகளை உயா் துல்லிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அப்போது கூறியது.
ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கிடங்குகள், எரிசக்தி குழாய்களைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், போருக்கான ரஷியாவின் பொருளாதார ஆதாரத்தை முடக்க உக்ரைன் முயல்கிறது. ரஷியாவும் உக்ரைனின் எரிசக்தி மையங்கள், ராணுவ தளவாட மையங்களில் தாக்குதல் நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷியா தற்போது நடத்தியுள்ள தாக்குதலில் 25 போ் உயிரிழந்தது உக்ரைனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன. இந்தப் போரில் எதிா்த்தரப்பை பலவீனப்படுத்துவதற்காக உக்ரைனின் எரிசக்தி மற்றும் ராணுவ தளவாட நிலைகள் மீது ரஷியாவும், ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைனும் தாக்குதல் நடத்திவருகின்றன.