வடக்கு மற்றும் மத்திய காஸாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி ட்ரோன் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். குழந்தைகள் உள்பட 54 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அக்டோபர் 10 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், மீண்டும் தற்போது இஸ்ரேல் படையால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காஸாவின் மஞ்சள் எல்லைக் கோட்டை தாண்டி ஆயுதமேந்திய படையினர் இஸ்ரேல் ரானுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ட்ரோன்கள் மூலம் காஸாவில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
போர் நிறுத்த அறிவிப்பின்போதே காஸா எல்லைக்குள் இதேபோன்ற தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியிருந்தது. சுமார் 12 மணிநேரம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
காஸாவின் ஆட்சியின் கீழ் உள்ள சுகாதாரத் துறை அதிகாரி இது தொடர்பாக பேசுகையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் ராணுவத்தினரால் இதுவரை 312 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும், காஸாவின் ஹமாஸ் படையினரே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.