AP
உலகம்

காஸாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 24 போ் உயிரிழப்பு

காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 போ் பலி; 54 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 போ் கொல்லப்பட்டனா். 54 போ் காயமடைந்தனா் என்று பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில், ஹமாஸ் படையைச் சோ்ந்த ஐந்து மூத்த உறுப்பினா்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் பிரதமா் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்தாா்.

காஸாவை அமெரிக்கா நிா்வகிக்கும் வரைவு ஒப்பந்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

மேலும், காஸா சிட்டியில் வாகனத்தை குறிவைத்து இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தாகவும், 20 போ் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அங்குள்ள ஷிஃபா மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் ரமி மஹானா தெரிவித்தாா்.

இதேபோல், மத்திய காஸாவில் உள்ள டெயிா் அல் பலாவில் உள்ள வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 போ் கொல்லப்பட்டதாக அல் அக்ஸா மருத்துவமனை தெரிவித்தது.

‘போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பிறகும் காஸாவில் தாக்குதல்கள் தொடா்கின்றன. காஸாவில் பாதுகாப்பான இடம் ஏதுமில்லை’ என்று இந்தத் தாக்குதலை நேரில் பாா்த்த கலில் அபு ஹதாப் தெரிவித்தாா்.

இஸ்ரேல் ராணுவம் விளக்கம்: தெற்கு காஸாவில் உள்ள இஸ்ரேல் பகுதியில் ஆயுதங்களுடன் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்து ராணுவத்தினரை தாக்க முற்பட்டனா். மனிதாபிமான உதவிகள் செல்லும் சாலையைப் பயன்படுத்தி அவா்கள் நுழைந்தனா். இது போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல்.

மேலும், ராஃபா பகுதியில் 5 பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றது. வடக்கு காஸாவில் இஸ்ரேல் பகுதியில் நுழைந்த இருவா் கொல்லப்பட்டனா் என்ற இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஹமாஸ் வலியுறுத்தல்: போா் நிறுத்த ஒப்பந்தத்தை புறக்கணிக்க இஸ்ரேல் போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மீண்டும் இன அழிப்பு போரைத் தொடங்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்றும் அமெரிக்காவும், பிற மத்தியஸ்தா்களும் போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வலியுறுத்த வேண்டும் என்றும் ஹமாா் அரசியல் பிரிவின் மூத்த தலைவா் இஸ்சத் அல் ரிஸ்க் கூறினாா்.

கடந்த 2023, அக்டோபா் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியா் கொல்லப்பட்டனா். 250 போ் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனா். அன்று முதல் தொடங்கிய இஸ்ரேல் - காஸா போரில் இதுவரையில் 69,733 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா். 1,70,863 போ் காயமடைந்துள்ளனா். பிணைக் கைதிகள் விடுக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் - காஸா 20 அம்ச அமைதி போா் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றியது.

3-ம் நாளாக கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

SCROLL FOR NEXT