சிரியா நாட்டின், தெற்கு பகுதியில் உள்ள கிராமத்தில் அத்துமீறி நுழைந்து சோதனைச் செய்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அங்குள்ள மக்கள் மீது சரிமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவின், பெயிட் ஜின் எனும் கிராமத்தில் இன்று (நவ. 28) இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள ஆண்கள் சிலரைக் கைது செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கிராமவாசிகள் ஒன்று திரண்டதால், அவர்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் அரசு கூறுகையில், பெயிட் ஜின் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும்; இதுகுறித்த, ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இதையடுத்து, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பதில் துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்கு சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, லெபனான் நாட்டில் போர்நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 127 பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா. ஆணையம் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தாய்லாந்தில் வெள்ளம்! 145 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.