அமெரிக்காவின் அவமதிப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புதின், இந்தியா - ரஷியா இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார்.
இந்தியா - ரஷியா உறவு குறித்து அவர் பேசியதாவது:
“இந்திய மக்கள் எங்களின் உறவை மறந்துவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் ஒரு சிறப்பு கூட்டாண்மையை அறிவித்தோம், அது எங்களின் உறவுக்கு மிகச் சிறந்த விளக்கமாகும். பிரதமர் மோடி ஒரு மிகவும் புத்திசாலியான தலைவர், அவர் முதலில் தனது நாட்டைப் பற்றி சிந்திப்பவர்.” எனத் தெரிவித்தார்.
ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி குறித்து புதின் பேசியதாவது:
”இதில் அரசியல் எதுவும் கிடையாது. முற்றிலும் பொருளாதார கணக்கீடு. இந்தியா எங்கள் எரிசக்தி வளங்களை கைவிடுமா? அப்படி கைவிட்டால் இழப்புகள் ஏற்படும். சுமார் 9-10 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பு ஏற்படலாம். ஆனால், கொள்முதலை கைவிடாவிட்டால், அமெரிக்க வரியால் ஏற்படும் இழப்பும் அதே அளவில் இருக்கும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள், அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள், யாருக்கு முன்பாகவும் எந்த அவமானத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், பிரதமர் மோடியை நான் அறிவேன். அவர் ஒருபோதும் அழுத்தங்கள் காரணமாக எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டிரம்ப் பேசும்போது, ”ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியாவும் சீனாவும் உக்ரைன் போரில் ரஷியாவுக்கு நிதி அளிப்பவர்களாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தாண்டு இறுதியில் ரஷிய அதிபர் புதின், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.