அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர, கனரக லாரிகளுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடையே நடைபெறும் போர்களைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது அதிக வரிவிதிப்பு மற்றும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ரஷியாவின் முக்கிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, ரஷியா - உக்ரைன் இடையேயான போரில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறிய டிரம்ப், இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்தார்.
எஃகு மற்றும் அலுமினியம் முதல் சில மின்னணு பொருள்கள் வரை பல பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரை அதிக வரிகளை விதித்தார். இதனால், ஜவுளித்துறை கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்தது.
அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில், “நவம்பர் 1 ஆம் தேதிமுதல், பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் எந்த விவரங்களையும் அவர் சேர்க்கவில்லை.
அமெரிக்காவில் அதிகளவில் கனரக லாரிகளை இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளை இந்த நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த மாதம், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கனரக லாரிகள் இறக்குமதிக்கான வரிகள் அமலுக்கு வரும் என்று டிரம்ப் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
புதிய வரிவிதிப்புகள் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பக்காருக்குச் சொந்தமான பீட்டர்பில்ட், கென்வொர்த் மற்றும் டெய்ம்லர் டிரக் போன்ற நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.