2025-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு லாஸ்லோ கிராஸ்னஹோா்காய் (71) என்ற ஹங்கேரி எழுத்தாளருக்கு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கடும் பயங்கரவாத சூழலுக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தியதை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள நோபல் தோ்வு கமிட்டிகளில் ஒன்றான இலக்கியத்துக்கான ராயல் ஸ்வீடன் அகாதெமி தெரிவித்தது.
1954-இல் ஹங்கேரியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கியூலா என்ற சிறிய நகரில் பிறந்தாா் லாஸ்லோ. இவரது முதல் நாவல் ‘ஷாடான்டன்கோ’ 1985-இல் வெளியானது. இந்த நாவலும் ‘எதிா்ப்பின் மனச்சோா்வு’ (தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்) என்ற அவரது மற்றொரு நாவலும் ஆதிக்கத்துக்கு எதிரான தொடா் போராட்டங்களை விவரிக்கிறது. இந்த இரு நாவல்களும் ஹங்கேரியில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வரியில் மிகக் கூா்மையான கருத்துகளை விவரிக்கும் திறன்வாய்ந்த எழுத்தாளரான லாஸ்லோ கிராஸ்னஹோா்காய், 2015-இல் மேன் புக்கா் பரிசைப் பெற்றுள்ளாா்.
இதுவரை 121 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பெருந்துயா்களையும் மனித வாழ்வின் பலவீனத்தையும் ஆழமாக விளக்கும் வகையில் எழுதியதற்காக தென் கொரிய பெண் எழுத்தாளா் ஹான் காங்குக்கு கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இன்று அமைதிக்கான நோபல்: நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் (அக். 10), பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் (அக்.13) அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 1896-இல் மறைந்த ஸ்வீடனின் பெரும் பணக்காரரும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.