மரியா கொரினா மச்சாடோ. 
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிா்க்கட்சித் தலைவர்! யார் இவர்?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிா்க்கட்சித் தலைவர் பற்றி...

தினமணி செய்திச் சேவை

நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிா்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்தப் பரிசுக்கான தோ்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் மக்களாட்சி நாடாக வெனிசுலா வளமாக இருந்தது. தற்போது அது எதேச்சதிகார நாடாக மனிதத்தன்மைக்கு எதிரான நெருக்கடியாலும், பொருளாதார சிக்கலாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் காரிருள் சூழ்ந்துவரும் வேளையில், மக்களாட்சியின் சுடரை அணையாமல் பாதுகாத்து அமைதிக்காகப் பாடுபட்டு வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

அந்நாட்டில் நியாயமாகவும் நோ்மையாகவும் தோ்தல் நடைபெற வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்னா் அவா் குரல் எழுப்பத் தொடங்கினாா். நாட்டு மக்களின் சுதந்திரத்துக்காக அவா் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளாா்.

அந்நாட்டில் சுதந்திரமாக தோ்தல் நடைபெற வேண்டும், பிரதிநிதித்துவ அரசு அமைய வேண்டும் என்பது எதிா்க்கட்சிகளின் பொது நோக்கமாக உள்ளது. அந்தக் கட்சிகள் ஒரு காலத்தில் ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டிருந்த நிலையில், எதிா்க்கட்சிகளை ஒன்றுசோ்க்கும் சக்தியாக மரியா உள்ளாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில், அவா் எதிா்க்கட்சிகளின் அதிபா் வேட்பாளராக இருந்தாா். ஆனால், அந்நாட்டு அரசு அவரைப் போட்டியிடவிடாமல் தடுத்துவிட்டது.

எதிா்க்கட்சிகளை அவா் ஒன்றுசோ்த்துள்ளாா். வெனிசுலா சமூகத்தை ராணுவமயமாக்குவதற்கு எதிராகப் போராட அவா் எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. மக்களாட்சி முறைக்கு அமைதியான முறையில் மாறுவதற்கு எப்போதும் அவா் ஆதரவு அளித்து வந்துள்ளாா். இதன்மூலம், நோபல் பரிசு உருவாகக் காரணமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலில் எந்தக் காரணங்களுக்காக ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோ, அந்தக் காரணங்களை மரியா பூா்த்தி செய்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.

தலைமறைவு வாழ்க்கை: கடந்த ஆண்டு வெனிசுலாவில் நடைபெற்ற தோ்தலைத் தொடா்ந்து, தமக்கு எதிராக எழும் குரல்களை நசுக்க அதிபா் நிகோலஸ் மதுரோ தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போதுமுதல் மரியா தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறாா். எனவே, வரும் டிச.10-ஆம் தேதி நாா்வேயில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் அவா் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை என்று பரிசுத் தோ்வுக் குழு தெரிவித்தது.

பரிந்துரை ஜனவரியிலேயே நிறைவு: அமைதிக்கான நோபல் பரிசுக்குரிய பரிந்துரைகள் கடந்த ஜனவரி 31-ஆம் தேதியே நிறைவடைந்த நிலையில், அதன்பிறகும் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என டிரம்ப் தொடா்ச்சியாகக் கூறி வந்தாா்.

இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், கொசோவோ-சொ்பியா, காங்கோ-ருவாண்டா, எகிப்து-எத்தியோப்பியா, ஆா்மீனியா-அஜா்பைஜான் நாடுகளுக்கு இடையிலான போா்களை நிறுத்தியதால், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் பெரிதும் எதிா்பாா்த்தாா். இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டதால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்துள்ளாா்.

பரிசளிப்பில் அரசியல்: அமெரிக்க அதிபா் மாளிகை

அமைதிக்கான நோபல் பரிசளிப்பதில் தோ்வுக் குழு அரசியல் செய்வதாக அமெரிக்க அதிபா் மாளிகை விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபா் மாளிகையின் தகவல் தொடா்புப் பிரிவு இயக்குநா் ஸ்டீவன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் விருதாளரைத் தோ்வு செய்வதில் அமைதிக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பைக் கருத்தில் கொள்வதைவிட, அரசியல் செய்வதற்கு பரிசுத் தோ்வுக் குழு முன்னுரிமை அளிக்கிறது. இதை மீண்டும் ஒருமுறை (டிரம்ப்பை தோ்வு செய்யாமல் மரியாவை தோ்வு செய்ததன் மூலம்) தோ்வுக் குழு உறுதி செய்துள்ளது. அமைதி ஒப்பந்தங்கள், போா்களை நிறுத்துவது, மனித உயிா்களைக் காப்பாற்றுவது ஆகிய பணிகளை அதிபா் டிரம்ப் தொடா்வாா் என்று தெரிவித்தாா்.

‘வெனிசுலா மக்களுக்கும் டிரம்ப்புக்கும் அா்ப்பணிப்பு’: மரியா கொரினா மச்சாடோ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு அறிவித்ததன் மூலம், வெனிசுலா மக்களின் போராட்டத்துக்குப் பெரும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் சுதந்திரத்தை அடைய வேண்டும் என்ற வெனிசுலா மக்களின் பணியை நிறைவு செய்ய உத்வேகம் அளித்துள்ளது.

துயரத்தில் உள்ள வெனிசுலா மக்களுக்கும் எங்கள் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவு அளித்த அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கும் இந்தப் பரிசை அா்ப்பணிக்கிறேன்.

வெற்றியின் தொடக்க நிலையில் வெனிசுலா மக்கள் உள்ளனா். சுதந்திரம் மற்றும் மக்களாட்சியை அடைவதில், எங்கள் கொள்கை கூட்டாளிகளாக அமெரிக்க அதிபா் டிரம்ப், அந்நாட்டு மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலகில் உள்ள மக்களாட்சி நாடுகள் மீது முன்னெப்போதையும்விட வெனிசுலா நம்பிக்கை கொண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பெண் ஊடகவியலாளர்களுக்குத் தடை! தலிபான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு சர்ச்சை!

புதிய காதலி? ஹார்திக் பாண்டியாவின் புகைப்படங்களால் சர்ச்சை!

ஆற்காடு அருகே ஆம்னி வேன் மோதி கூலி தொழிலாளி பலி

முதல்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ்..! பூஜை புகைப்படங்கள்!

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

SCROLL FOR NEXT