ஹாங் காங்: கடந்த செப்டம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி குறைந்துள்ளது, ஆனால், அதே வேளையில் உலகளாவிய ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பான தரவுகள், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி அளவு உயர்ந்திருந்தாலும், அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி முந்தைய ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 27 சதவிகிதம் குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
அக்டோபர் 13ம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஏற்றுமதி தொடர்பான் தரவுகள், சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி, கடந்த ஆண்டைக் காட்டிலும், 8.3 சதவிகிதம் அதிகமாகவும், அதாவது 328.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததைக் காட்டுகின்றது.
இது பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளைவிட அதிகம். இது ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 4.4 சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்ததைவிட குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதி தொடர்ந்து ஆறு மாதங்களாக சப்தமே இல்லாமல் மெல்ல சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஏற்றுமதி 33 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துள்ளது.
பெய்ஜிங் - வாஷிங்டன் இடையே இருந்த மோதல் போக்கு ஓரளவுக்கு முடிந்தது போல இருந்து, பிறகு இரு தரப்பினரும் புதிய வரிகள் மற்றும் மறைமுகமாக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இருதரப்பு உறவில் ஒரு தெளிவற்ற நிலைமை நிலவுகிறது. இந்த நிலையில்தான், சீனா ஒரு பக்கம் தங்கம் வாங்கிக் குவித்து வருகிறது. மறுபக்கம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியையும் சப்தமே இல்லாமல் குறைத்தும் வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் உற்பத்தி நிறுவனங்களை, அமெரிக்காவுக்கே மாற்றும் அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்துக்கு எதிர்வினையாகவே, அமெரிக்க ஏற்றுமதியைக் குறைத்து, தன்னுடைய ஏற்றுமதிக்கான சந்தைகளை வெளிநாடுகளில் விரிவுபடுத்தும் முயற்சியில் சீனா திட்டமிட்டு இறங்கியிருப்பதையே இந்த தரவுகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.