நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுவேலா அறிவித்துள்ளது.
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரிய கொரினா மசாடோவுக்கு நார்வேயின் நோபல் கமிட்டி நோபல் பரிசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஈடுபட்டுள்ளார்.
மேலும், பரம எதிரியாகக் கருதும் ஆஸ்திரேலியாவில் உள்ள தூதரகத்தை மூடுவதாகவும், இதற்கு பதிலாக ஜிம்பாப்வே மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாஸ்ஸோவிலும் பிரதிநிதித்துவத்தை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் ஐக்கிய சோசலிச கட்சியைச் சேர்ந்த நிகோலஸ் மதுரோவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நாட்டின் எதிர்க்கட்சியாக வென்டே வெனிசுவேலா கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் தலைவராக மரிய கொரினா மசாடோ செயல்பட்டு வருகிறார்.
சமூக ஆர்வலரான இவருக்கு, வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அயராது உழைத்ததால், அதனைப் பாராட்டும் வகையில் கடந்த 10ஆம் தேதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. வெனிசுவேலாவில் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கிய மாற்றத்தை கொண்டுவந்ததற்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.
வெனிசுவேலாவில் நடைபெற்று வரும் மதுரோவின் ஆட்சியை சர்வாதிகாரம் என மசாடோ வெளிப்படையாகக் குறிப்பிட்டார். மேலும், 2024 தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாகவும், ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட எட்முன்டோ கோன்சலெஸ் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.
வெனிசுவேலாவில் நிலவிவரும் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக ஜனநாயக முறையிலான நடவடிக்கைகளை மசாடோ தேர்வு செய்தார். இதனால் அவருக்கு நார்வே நோபல் கமிட்டி சார்பில் நோபல் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நார்வேயில் செயல்பட்டு வரும் தூதரகத்தை மூடுவதாக அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். இதேபோன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தூதரகத்தையும் மூடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அழகி மெலோனி! அருவருப்பாக மாறிய அமெரிக்க, துருக்கி அதிபர்களின் பாராட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.